கொரானோ கிருமித்தொற்று காரணமாக தாய்லாந்தின் சுற்றுப்பயணத்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்நிலையில், விடுமுறைக் காலத்தை முன்னிட்டு தாய்லாந்தில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.கொரோனா சூழல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை தாய்லாந்து அரசு தளர்த்துகிறது.இதன்படி தாய்லாந்துக்குள் நுழைய சுற்றுப்பயணிகள் முன்கூட்டியே விசா பெறத் தேவையில்லை. ஆனால் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் சுகாதாரச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். தாய்லாந்து சென்றடைந்ததும் 14 நாள் தனிமைப்படுத்தும் விதிமுறைக்கு உட்பட வேண்டும் என்று தாய்லாந்தின் கொவிட்-19 சூழல் நிர்வாக நிலையம் தெரிவித்தது.தனிமைப்படுத்தப்படும் சுற்றுப்பயணிகளுக்கு கொரோனா மருத்துவப் பரிசோதனை மூன்று முறை நடத்தப்படும். இதற்கு முன்பு இரண்டு முறை மட்டும் நடத்தப்பட்டதாக நிலையம் தெரிவித்தது.சுற்றுப்பயணிகளுக்குக் கூடுதல் கொரோனா மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுவதால் தனிமைப்படுத்தப்படும் நாட்கள் அடுத்த மாதத்திலிருந்து 10 நாட்களுக்குக் குறைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தாய்லாந்து மக்களுக்கு கொரோனா கிருமி பரவுவது தடுக்கப்படும் என்று தாய்லாந்து அதிகாரிகள் கூறினர்.கிருமித்தொற்றால் அவ்வளவாக பாதிக்கப்படாத நாடுகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளுக்குத் தடை விதிப்பதைவிட இந்த அணுகுமுறை சிறந்ததாகக் கருதப்படுகிறது.தாய்லாந்தில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ் உட்பட 56 நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளுக்கு 30 நாட்கள் வரை தங்கும் அனுமதி வழங்கப்படும்.அர்ஜெண்டினா, பிரேசில், சிலி, பெரு, தென்கொரியா ஆகிய ஐந்து நாடுகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகள் தாய்லாந்தில் அதிகபட்சமாக 90 நாட்கள் தங்கலாம்.
ஆனால் கிருமித்தொற்று சூழல் மேம்படும் வரை கம்போடியா, மியன்மார் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கப்படாது.என்று நிலையத்தின் பேச்சாளர் திரு தவீசில்ப் விட்சானுயோத்தின் தெரிவித்தார்.