நமது நாட்டின் கிறிஸ்தவ மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மனிதத்துவத்தின் மீதான அன்பின் செய்தியை பாதுகாத்தனர் – இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

நமது நாட்டின் கிறிஸ்தவ மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மனிதத்துவத்தின் மீதான அன்பின் செய்தியை பாதுகாத்துள்ளதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று குருநாகல் மறைமாவட்ட புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் தின அரச நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

இவ்வாறான கடினமான காலப்பகுதியிலேயே பக்தி, அன்பு மற்றும் நம்பிக்கையின் உணர்வு என்பன நாட்டிற்கு அவசியமாகிறது. மதத்தின் வழியே வாழும் சமூகமொன்றை உருவாக்குவதற்கு எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு அரசு ஒருபோதும் தயங்காது என்றும் குறிப்பிட்டார்.த்தார் தின அரச நிகழ்வுகளை குருநாகலில் கொண்டாடுவதற்கு அனுமதியளித்தமை தொடர்பில் முதலில் ஆயர் சம்மேளனத்திற்கு மிகுந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். அதேபோன்று என்னை பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்த மாவட்டத்தின் கிறிஸ்தவ மக்களுக்கு இவ்வாறானதொரு வாய்ப்பு கிடைத்தமை குறித்தும் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கத்தோலிக்க மக்கள் போன்று கிறிஸ்தவ மக்களுடன் இணைந்து புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இதுபோன்ற நத்தார் தின அரச நிகழ்வொன்றை நடத்துவதற்கு கிடைத்தமை குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சமாதானத்தின் செய்தியை உலகிற்கு தெரியப்படுத்துவதையே நாம் அனைவரும் செய்கின்றோம். இவ்வாறு நாம் அனைவரும் இணைந்து நத்தார் பண்டிகையை கொண்டாடுவதன் மூலம் நாம் உலகிற்கு முன்னுதாரணமாக விளங்குகிறோம்.

இம்முறை நத்தார் பண்டிகையை கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு வழமைப்போன்று கொண்டாட முடியாது. வேறு நாட்களில் நத்தார் தின பிரார்த்தனைகளின்போது பெருந்தொகையானோர் கலந்து கொள்வர். அதேபோன்று உற்றார் உறவினர்களுடன் ஒற்றுமையாக, நட்பை பரிமாறிக் கொள்ளக் கூடியதாகவிருந்தது. எனினும், இன்று அவ்வாறு செய்ய முடியாது. இன்று முகக்கவசம் அணிவது காரணமாக அயலவர்களுடன் புன்னகைப்பதற்கேனும் வாய்ப்பின்றியுள்ளது. அந்த வெளி நிகழ்வுகள் இல்லாத போதிலும், எவ்வாறான தடைகள் காணப்படினும், பிரச்சினைகள் இருப்பினும் அயலவர்கள் மீது உங்களது இதயத்தில் உள்ள அன்பில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை நான் அறிவேன். இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையின் போதே கத்தோலிக்கர்களாகிய உங்களுக்குள் காணப்படும் பக்தி, அன்பு மற்றும்நம்பிக்கை உணர்வு என்பன இந்நாட்டிற்கு முக்கியமானதாக அமைகின்றது.

இன்று நமக்கு மாத்திரமின்றி உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சுகாதார பரிந்துரைகளுக்கு முன்னுரிமை வழங்கியே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய இலங்கை கத்தோலிக்க மக்கள் சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுவது தொடர்பில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கத்தோலிக்க, கிறிஸ்தவ மக்கள் புத்திசாலித்தனம் மிகுந்தவர்கள். தூர நோக்குடையவர்கள். தங்களது மதத்தின் சம்பிரதாயங்கள், சடங்குகளுக்கு மேலாக பொது மனித இனம் பற்றி இந்த நெருக்கடியான தருணத்தில் சிந்திக்க கத்தோலிக்க மக்கள் தூண்டப்படுவார்கள் என்று நான் அறிவேன். கத்தோலிக்க மக்கள் முழு உலகிற்கும் கூறும் முக்கியமான நத்தார் செய்தியே இந்த பொது மனிதன் குறித்த உணர்வாகும்.

நமது நாட்டின் கிறிஸ்தவ மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மனிதத்துவத்தின் மீதான அன்பின் செய்தியை பாதுகாத்தனர். அதாவது 2019 ஏப்ரல் 21ஆம் திகதி, உங்களது பல முக்கியமான தேவாலயங்கள் போன்று கொழும்பின் முன்னணி ஹோட்டல்கள் மூன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 500இற்கும் அதிகமானோர் காணமடைந்தனர். உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடுவதற்காக தேவாலயங்களில் கூடியிருந்த பக்தர்களாவர். இது ஆசியாவில் மாத்திரமின்றி, சர்வதேச மட்டத்திலும் சிவில் மக்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட கொடிய பயங்கரவாதத் தாக்குதலாகும். பேராயர் அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைய அனைவரும் அமைதியா செயற்பட்டு உலகின் பாராட்டை பெற்றோம்.

வெறுப்பு வெறுப்பை தணிக்காது என்று புத்தபெருமான் கூறியுள்ளார். ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தை திருப்பி காட்டுமாறு இயேசு கிறிஸ்து தெரிவித்துள்ளார். கடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் முழுமையாக அரசாங்கத்தினால் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றுமாறு நான் அறிவுறுத்தினேன். அதேபோன்று தாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கும் நாம் தீர்மானித்துள்ளோம்.

கடந்த வாரம் 2020.12.16 பேராயர் அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

நத்தார் தின அரச நிகழ்வை முன்னிட்டு இப்பிரதேச தேவாலயங்கள் மற்றும் அறநெறி பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக இச்சந்தர்ப்பத்தில் நான் கூற விரும்புகிறேன். எமக்கு மதச்சார்பற்ற நாடு தேவையில்லை. அவ்வாறு மதம் வேண்டாம் என்பவர்களுக்கு கடந்த காலத்தில் சிறந்த பதில் கிடைத்தது. சமய ஒழுக்கவிதிகளுக்கு அமைய வாழும் சமூகமொன்றே எமக்கு வேண்டும். சமய விழுமியங்களுக்கு அமைய செயற்பட்டாலேயே அவ்வாறான சமூகமொன்றை உருவாக்க முடியும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் தயாராகவிருக்கின்றோம். பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் இந்நாட்டு மக்களை தேவாலயத்திற்கு, விகாரைக்கு, ஆலயத்திற்கு மிகுந்த நெருக்கமடைய செய்வதன் ஊடாக மதிப்பு நிறைந்த மக்கள் சமூகமொன்றை உருவாக்குவதே எமது முக்கிய நோக்கம்.
உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *