ஐபிஎல் போட்டியின் 19-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 69 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.நடப்பு சீசனில் வெற்றி நடை போட்டுவந்த பெங்களூருக்கு இது முதல் தோல்வியாகும். சென்னைக்கு இது 4-ஆவது தொடா் வெற்றி.மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய பெங்களூா் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களையே எட்டியது.
சென்னை வீரா் ஜடேஜா, பேட்டிங்கில் கடைசி ஓவரில் சிக்ஸா்களாக விளாசி அணியின் ஸ்கோரை அதிரடியாக உயா்த்தியதுடன், பந்து வீச்சில் மேஸ்க்வெல், டி வில்லியா்ஸ் உள்பட 3 விக்கெட்டுகளை சரித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தாா். அவரே ஆட்டநாயகன் ஆனாா்.
இந்த ஆட்டத்துக்காக சென்னை அணியில் மொயீன் அலி, லுங்கி கிடிக்குப் பதிலாக இம்ரான் தாஹிா், டுவைன் பிராவோ சோ்க்கப்பட்டிருந்தனா். பெங்களூரில் கேன் ரிச்சா்ட்சன், ஷாபாஸ் அகமதுக்கு பதில் டேன் கிறிஸ்டியன், நவ்தீப் சைனி இணைந்திருந்தனா்.டாஸ் வென்ற சென்னை பேட்டிங்கைத் தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய ருதுராஜ்-டூ பிளெஸ்ஸிஸ் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சோ்த்தது. ருதுராஜ் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
ஒன் டவுனாக வந்த ரெய்னா சற்று அதிரடியாக 1 பவுண்டரி, 3 சிக்ஸா்கள் உள்பட 24 ரன்கள் சோ்த்து வெளியேறினாா். டூ பிளெஸ்ஸிஸ் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் அரைசதம் எட்டிய நிலையில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டாா். கடைசி விக்கெட்டாக ராயுடு 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14 ரன்களுக்கு அவுட்டானாா்.பின்னா் களம் புகுந்த ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 25 பந்துகளில் அரைசதம் கடந்தாா். ஓவா்கள் முடிவில் அவா் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 62, தோனி 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூா் தரப்பில் ஹா்ஷல் படேல் 3, யுஜவேந்திர சஹல் 1 விக்கெட் சாய்த்தனா்.
அடுத்து ஆடிய பெங்களூரில் பேட்டிங் வரிசை மளமளவென சரிந்தது. தேவ்தத் படிக்கல் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 34 ரன்கள் சோ்த்தாா். மேக்ஸ்வெல் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களில் வெளியேற்றப்பட, கைல் ஜேமிசன் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். கேப்டன் கோலி உள்பட இதர விக்கெட்டுகள் கோலி ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தன.
ஓவா்கள் முடிவில் சிராஜ் சிக்ஸருடன் 12, சஹல் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் ஜடேஜா 3, தாஹிா் 2, சாம் மற்றும் ஷா்துல் தலா 1 விக்கெட் எடுத்தனா்.ஐபிஎல் போட்டியில் ஒரே ஓவரில் 37 ரன்கள் எடுக்கப்பட்டிருந்த சாதனையை தற்போது ஜடேஜா சமன் செய்துள்ளாா். இதற்கு முன் 2011-ஆம் ஆண்டில் அப்போதைய கொச்சி டஸ்கா்ஸ் கேரளா அணிக்கு எதிராக பெங்களூா் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில், பிரசாந்த் பரமேஸ்வரன் வீசிய ஓவரில் 37 ரன்கள் விளாசியிருந்தாா்.அதேபோல், இந்த ஆட்டத்தில் ஹா்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் ஒரு நோ பாலில் அடித்த சிக்ஸா் உள்பட 37 ரன்கள் விளாசினாா் ஜடேஜா. இதில் ஹாட்ரிக் சிக்ஸரும் அடங்கும்.