தென் கிழக்கு ஆசிய நாடுகள் கொரோனாவின் அடுத்த எழுச்சியைத் தடுப்பதற்கு தடுப்பூசி போடுகிற வேகத்தை அதிகரிக்க வேண்டும் – உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையைத் தடுப்பதற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் முழுமூச்சுடன் போராடி வருகின்றன.இந்த தருணத்தில் உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறியதாவது:-

தென் கிழக்கு ஆசிய நாடுகள் கொரோனாவின் அடுத்த எழுச்சியைத் தடுப்பதற்கு தடுப்பூசி போடுகிற வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

நாம் தொடர்ந்து கொரோனா பரிசோதனை, தடம் அறிதல், தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், கைச்சுத்தம் பராமரித்தல், முககவசங்களை வாயையும், மூக்கையும் மறைத்து அணிந்திருத்தல் ஆகிய கட்டுப்பாடுகளை கடுமையாக செயல்படுத்த வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை உருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவுகிற பகுதிகளில் முழு வீரியத்துடன், நீண்ட காலங்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடுதலை நாடுகள் அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில் பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை சுறுசுறுப்பான விதத்தில் செயல்படுத்த வேண்டும்.

கொரோனாவை கட்டுப்படுத்த பொது சுகாதாரம், சமூக நடவடிக்கைகள் ஆகியவை மருந்து சாரா நடவடிக்கைகள் ஆகும். தனி நபராகவும், சமூகமாகவும், கொரோனா பரவலை குறைப்பதற்கும், உயிர்களைக் காப்பதற்கும் மேற்கொள்கிற செலவு குறைந்த நடவடிக்கைகள் ஆகும்.

எங்கெல்லாம் உருமாறிய கொரோனா வகைகள் அதிகமாக பரவுகின்றனவோ, அங்கெல்லாம் இந்த நடவடிக்கைகளை கடுமையாகவும், நீண்ட காலமும் மேற்கொள்ள வேண்டும்.பொருளாதாரங்களையும், சமூகங்களையும் திறக்கிறபோது உருமாறிய கொரோனா வகைகள், உலகளவில் சமீபத்திய எழுச்சிக்கு காரணங்களாகி உள்ளன.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று இன்னும் நம்மைச் சுற்றிலும் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நாம் எந்த நிலையிலும், கொரோனாவை ஒழித்துக்கட்டி விட்டோம் என்று மனநிறைவு அடைந்துவிடக்கூடாது.உலகளவில் கொரோனா தடுப்பூசிகளை சுகாதார பணியாளர்களுக்கும், அதிக ஆபத்தில் உள்ள பிரிவினர்களுக்கும் நாம் போட்டு முடிக்கிற வரையில் நாம் பொது சுகாதார, சமூக நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *