ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் ராணா (வயது 23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் கடந்த 4ந்தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சாகர் ராணாவை அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி சாகர் உயிரிழந்தார். இது தொடர்பாக சாகர் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட சிலரை போலீசார் தேடி வந்த நிலையில் சுஷில் குமார் தலைமறைவானார். சாகர் உயிரிழந்ததையடுத்து, இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர்.இந்த சம்பவம் நடந்தபின், சுஷில் குமார் ஹரித்துவார் சென்று, அங்கிருந்து ரிஷிகேஷ் சென்றுள்ளார். பின்னர் சுஷில் குமார் தொடர்ந்து தனது இடத்தை மாற்றிக்கொண்டே வருகிறார். இதனால் போலீசாரால் சுஷில் குமார் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது . இதனையடுத்து, சுஷில் குமார் நாட்டை விட்டு தப்பி செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பினர்.இந்த நிலையில், மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் டெல்லி கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதேபோன்று அவரை பிடிப்பதற்கு பரிசு தொகை அறிவிக்கவும் டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
