தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 முதல் 5 மாதங்கள் உள்ள நிலையில்
தற்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.
திமுகவும் அதிமுகவும் மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை ஒருவர் மீது ஒருவர் முன்வைத்து வருகின்றன.
திமுக மீது 2ஜி வழக்கை சுட்டிக்காட்டி அதிமுக ஊழல்குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. அதேபோல்
அதிமுக மீது துறை ரீதியாக டெண்டர் முறைகளில் ஊழல் நடைபெறுவதாக திமுக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு மீது வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள தொடர்பாக
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் தற்போது சந்தித்து 97 பக்க புகார் பட்டியல் ஆதாரங்களுடன் சமர்ப்பித்தார்.
பின்னர் பத்திரிகையாளரிடம் பேசும் போது மு.க ஸ்டாலின் கூறியதாவது ;
.
அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பல்வேறு புகார்கள் கொடுத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
ஏற்கெனவே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான புகாரில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தற்போது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பதால் ஆளுநரிடம் 97 பக்க புகார் பட்டியல் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆதாரங்கள் கிடைக்க வேண்டியுள்ளது. அதன்பின்னர் இரண்டாம் பாகத்தை ஆளுநரிடம் கொடுப்போம். புகார்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்” என்றார்.
ஆளுநர் உடனடான சந்திப்பின் போது திமுக தலைவர் முக ஸ்டாலினுடன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு உள்பட முக்கிய தலைவர்கள் உடன் சென்றிருந்தனர்.