டொமினிகா போலீஸ் கஸ்டடியில் உள்ள மெகுல் சோக்கியை எங்களிடம் ஒப்படையுங்கள் டொமினிகாவிடம் இந்தியா வேண்டுகோள்

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதனால், சி.பி.ஐ. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.இந்நிலையில் ஆன்டிகுவாவில் தஞ்சம் அடைந்திருந்த மெகுல் சோக்சியை (வயது 62) இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆன்டிகுவா குடியுரிமை பெற்ற அவரை நாடு கடத்துவது தொடர்பான சட்ட நகர்வுகளை மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென மெகுல் சோக்சி காணாமல் போனார்.ஆன்டிகுவாவை விட்டு வெளியேறிய மெகுல் சோக்சி, படகு மூலம் அருகில் உள்ள சிறிய தீவு நாடான டொமினிகாவுக்கு சென்றபோது போலீசில் சிக்கினார். சட்டவிரோதமாக டொமினிகாவில் நுழைந்து, அங்கிருந்து கியூபாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

டொமினிகா போலீஸ் கஸ்டடியில் உள்ள மெகுல் சோக்கியை ஆன்டிகுவா அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், கைது செய்யப்பட்ட மெகுல் சோக்சியை டொமினிகாவிலிருந்து நேரடியாக இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமரான கேஸ்டன் பிரவுன் கோரிக்கை வைத்தார்.இந்த பரபரப்பான சூழ்நிலையில், கத்தார் விமான நிறுவனத்தின் ‘பாம்பார்டியர் குளோபல் 5000’ என்ற விமானம் டொமினிகாவில் உள்ள டக்ளஸ் சார்லஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தை திடீரென டொமினிகாவிற்கு யார் கொண்டு வந்தார்கள்? டொமினிகாவில் இருந்து யாரை அழைத்துச் செல்ல வந்தார்கள்? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. மெகுல் சோக்சியை டொமினிகாவில் இருந்து இந்தியாவிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருப்பதாகவும் தகவல்கள் பரவின.

இந்த தனியார் விமானம் இந்தியாவில் இருந்து வந்தது என்று ஆன்டிகுவா பிரதமர் கேஸ்டன் பிரவுன் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதற்கிடையே மெகுல் சோக்சியை தங்களிடம் ஒப்படைக்கும்படி இந்தியா டொமினிகா அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மெகுல் சோக்சி இந்திய குடிமகன், அவர் மிகப்பெரிய குற்றம் செய்திருப்பதால் எங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று இந்தியா கூறி உள்ளது. இதனை டொமினிகா அரசு பரிசீலிக்க வேண்டும் என ஆன்டிகுவா பிரதமர் கூறி உள்ளார்.அதேசமயம், நீதிமன்ற உத்தரவை மதிப்பதாகவும், சோக்சி ஆன்டிகுவாவுக்கு நாடு கடத்தப்பட்டால், அவர் குடியுரிமைக்கான சட்ட மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்பை தொடர்ந்து அனுபவிப்பார் என்றும் குறிப்பிட்டார். விவகாரம் தீவிரமடையும்பட்சத்தில், மெகுல் சோக்சியின் குடியுரிமையை ஆன்டிகுவா பிரதமர் ரத்து செய்யலாம் என கூறப்படுகிறது.இதற்கிடையே டொமினிகா போலீஸ் கஸ்டடியில் உள்ள மெகுல் சோக்சியின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அவரது வழக்கறிஞர் இந்த புகைப்படங்களை ஊடகங்களுக்கு வழங்கி உள்ளார். அதில், மெகுல் சோக்கியின் கையில் அடிபட்டதற்கான காயம் இருந்தது. ஒரு கண் வீங்கியிருந்தது.மெகுல் சோக்கியை ஆன்டிகுவாவின் ஜாலி துறைமுகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக டொமினிகாவுக்கு கடத்திச் சென்றதாகவும், அவர் போலீசாரால் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவரது வழக்கறிஞர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *