ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ‘சாம்பியன்’

வெற்றி மகிழ்ச்சியில்மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. களிமண் தரை போட்டியான இதில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 10-வது இடத்தில் இருந்த இத்தாலியின் பெரேட்டினியை எதிர்கொண்டார்.
இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பது போல் ஆக்ரோஷமாக மோதினார்கள். இதனால் இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அனல் பறந்தது. முதல் செட்டில் இருவரும் மாறி, மாறி புள்ளிகள் எடுத்தனர்.

71 நிமிடங்கள் நீடித்த முதல் செட்டில் டைபிரேக்கரில் பெரேட்டினி 5-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் அடிபட்ட வேங்கை போல் வெகுண்டெழுந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சரிவில் இருந்து மீண்டு வந்து 7-6 என்ற கணக்கில் முன்னிலை பெற்றாலும் கடைசி கட்டத்தில் செய்த தவறால் முதல் செட்டை மயிரிழையில் கோட்டை விட்டார்.2-வது செட்டிலும் பெரேட்டினி முதல் 4 புள்ளிகள் வரை சமநிலை வகித்ததுடன் கடும் சவால் கொடுத்தார். அதன் பிறகு அலெக்சாண்டர் ஸ்வெரேவின் கை ஓங்கியது. எதிராளியின் தவறுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அந்த செட்டை தனதாக்கியதுடன். அதே உத்வேகத்துடன் அடுத்த செட்டிலிலும் அசத்தி வெற்றியை தன்வசப்படுத்தினார்.2 மணி 40 நிமிடம் நடந்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-7 (8-10), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பெரேட்டினியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அத்துடன் 8 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இருந்த பெரேட்டினியின் வீறுநடைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் கால்இறுதியில் 5 முறை சாம்பியனான ரபெல் நடாலையும் (ஸ்பெயின்), அரைஇறுதியில் இரண்டு முறை 2-வது இடம் பிடித்த டொமினிக் திம்மையும் (ஆஸ்திரியா) சாய்த்து இருந்தார். அவர் ஒரே போட்டியில் தரவரிசையில் ‘டாப்-10’ இடங்களுக்குள் உள்ள 3 வீரர்களை 2-வது முறையாக வீழ்த்தி இருக்கிறார்.24 வயதான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மாட்ரிட் ஓபன் பட்டத்தை வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2018-ம் ஆண்டில் இந்த பட்டத்தை வென்று இருந்தார். அவர் வென்ற 1000 தரவரிசை புள்ளிகள் கொண்ட 4-வது சர்வதேச பட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.சாம்பியன் பட்டத்தை வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு ரூ.2 கோடியே 81 லட்சம் பரிசுத் தொகையும், 1000 தரவரிசை புள்ளியும் கிடைத்தன. 2-வது இடம் பிடித்த 25 வயது பெரேட்டினிக்கு ரூ.1 கோடியே 68 லட்சம் பரிசாக கிட்டியது. நேற்று வெளியிடப்பட்ட புதிய தரவரிசை பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பெரேட்டினி ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *