மதுரை சேர்ந்தவர் இளங்கோவன். மாநகராட்சி மின் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஹரிஸ்வர்மன் (வயது 7). இவர் சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனது தந்தை மூலம் அனுப்பி வைத்தார்.
இதனை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுவன் ஹரிஸ்வர்மனை போனில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார்.மேலும் அந்த சிறுவனுக்கு புதிய சைக்கிளை பரிசாக வாங்கி கொடுத்து வாழ்த்தினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய சைக்கிளை மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கோ.தளபதி சிறுவனிடம் நேரில் ஒப்படைத்தார். அப்போது சிறுவன் ஹரிஸ்வர்மன் அந்த சைக்கிளை ஓட்டி மகிழ்ந்தார்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகன் ஹரிஸ்வர்மனுக்கு சைக்கிள் வழங்கியதற்கு அவனது பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.