சசிகலாவின் அரசியல் முழுக்கு அதிமுகவுக்கே லாபம்- அரசியல் நோக்கர்கள் கணிப்பு

தமிழக அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக உச்சரிக்கப்பட்ட பெயர் சசிகலா. 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான அவர் கடந்த மாதம் 8-ந் தேதி சென்னை திரும்பினார். 24 மணிநேரம் தொடர்ச்சியாக வழிநெடுக தொண்டர்கள் அவருக்கு அளித்த உற்சாக வரவேற்பு தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.சென்னை வந்து சேருவதற்கு முன்பே தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். அதேநேரத்தில் ஜெயலலிதாவின் பிள்ளைகள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். சென்னைக்கு சென்ற பிறகு இதுதொடர்பாக விரிவாக அறிவிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனால் சசிகலாவின் விடுதலை தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.தி.நகரில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த சசிகலா, அரசியல் பிரவேசம் தொடர்பாக என்ன அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பரவலாகவே இருந்து வந்தது. ஆனால் சசிகலாவோ அரசியல் பிரவேசம் தொடர்பாக எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காமல் கடந்த 3 வாரங்களாக அமைதி காத்து வந்தார்.

ஆனால் ஜெயலலிதா பிறந்தநாளான கடந்த 24-ந் தேதியன்று அவரது படத்துக்கு மாலை அணிவித்த சசிகலா, தொண்டர்களை விரைவில் சந்திக்கப் போவதாக மீண்டும் கூறினார். இதனால் சசிகலா எந்த நேரத்திலும் அரசியல் களத்தில் அதிரடியாக குதிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்பட்டது.இதனை உறுதிபடுத்தும் விதத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் சிலரும் அடுத்தடுத்து சசிகலாவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இதனால் சசிகலா தலைமையில் புதிய அணி உருவாகுமோ? என்கிற எதிர்பார்ப்பும் நிலவியது.

அதுபோன்று புதிய அணியை சசிகலா உருவாக்கினால், அது அ.தி.மு.க.வுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே அரசியல் நோக்கர்கள் கணித்தனர்.இந்தநிலையில் சசிகலா யாரும் எதிர்பாராதவிதமாக நேற்று இரவு பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளேன். எப்போதும் பதவிக்கும், பட்டத்துக்கும் நான் ஆசைப்பட்டது இல்லை. ஜெயலலிதாவின் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது ஆசை. மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய நான் பிரார்த்திப்பேன் என்று அந்த அறிக்கையில் சசிகலா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் இந்த திடீர் முடிவு அ.தி.மு.க.வினர் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி சசிகலாவின் முடிவை வெகுவாக வரவேற்றுள்ளார்.அ.தி.மு.க. தலைவர்கள் சிலரும் அரசியலில் இருந்து சசிகலா ஒதுங்கியதை பாராட்டி உள்ளனர்.அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியை நடத்தி வரும் டி.டி.வி. தினகரனும், சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று முழுமையாக நம்பி இருந்தார். அரசியலுக்கு முழுக்கு என்ற அறிவிப்பை நேற்று சசிகலா வெளியிட்டதும் பேட்டி அளித்த அவர், சின்னம்மாவின் இந்த முடிவு எனக்கு கடும் அதிர்ச்சியையும், சோர்வையும் ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அ.தி.மு.க. தலைமை பதவியான பொதுச் செயலாளர் பதவியில் அங்கம் வகித்த சசிகலா, தற்போதும் அதே பதவியில்தான் நீடிப்பதாகவும், இதற்காக சட்டப் போராட்டத்தை அவர் நடத்தி வருவதாகவும் அ.ம.மு.க. வினர் தொடர்ந்து கூறி வந்தனர்.சசிகலாவுடன் இணைந்து தேர்தல் நேரத்தில் எப்படியும் அ.தி.மு.க.வுக்குள் நுழைந்துவிடலாம் என்பதே அவர்களின் பெரும் கனவாக இருந்தது.

சசிகலாவின் அதிரடி முடிவு அ.தி.மு.க.வினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், அ.ம.மு.க.வினரை கடும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவர்களது கனவு கலைந்தது.
அ.ம.மு.க. பொதுச் செயலாளராக தினகரன் இருந்த போதிலும், சிறையில் இருந்து வெளி வந்த பிறகு சசிகலா அந்த கட்சியை வழிநடத்தி செல்ல வாய்ப்பு ஏற்படலாம் என்ற கருத்தும் பரவலாக இருந்து வந்தது.ஆனால் இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சசிகலா முடிவெடுத்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒன்றாக இணைந்து அ.தி.மு.க.வை வழிநடத்தி வருகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவிய நிலையிலும், அதற்கு பிறகு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க.வுக்கு இணையாக அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

உள்ளாட்சி தேர்தல்களிலும் 50 சதவீதம் அளவுக்கு அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். இந்த இரண்டு வெற்றிகளும் ஜெயலலிதா இல்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்து பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகவே கருதப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது நிச்சயம் 5 முதல் 7 சதவீத ஓட்டுகளை அவர் பிரிப்பார் என்று கணிக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் சசிகலா வெளியில் வந்து தனி அணியை ஏற்படுத்தினால் அவரும் 7 சதவீதம் அளவுக்கு ஓட்டுகளை பிரிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணித்து இருந்தனர். ஆனால் தற்போது இந்த இரண்டுமே இல்லை என்றாகிவிட்டது. இது அ.தி.மு.க. தலைவர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இதனால் தங்களது பழைய செல்வாக்கை அப்படியே நிலை நிறுத்தி வெற்றி பெற முடியும் என்று அ.தி.மு.க. உறுதிபட நம்புகிறது.ஆனால் தினகரன் தனி அணியாக களம் இறங்குகிறார். அவர் பிரிக்கும் ஓட்டுக்கள் மட்டுமே அ.தி.மு.க.வை பாதிக்கும் வகையில் உள்ளது. சசிகலா இல்லாத நிலையில் தினகரனின் அ.ம.மு.க.வில் இருப்பவர்கள் அப்படியே அங்கு நீடிப்பார்களா? என்பதும் பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.

எப்படி பார்த்தாலும் சசிகலாவின் அரசியல் முழுக்கு அ.தி.மு.க.வுக்கு லாபம் என்றே அரசியல் நோக்கர்களால் கணிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *