கொரோனாவில் இருந்தும் விரைவில் விடுதலை பெறப்போகிறோம் – அமெரிக்க அதிபர் ஜோபைடன்

உலகம் முழுவதும் கொரோனா பரவல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிர்களை பலிவாங்கி நாடுகளின் பொருளாதாரத்தையும் வீழ்த்தியுள்ளது.

கொரோனா அமெரிக்காவை திணற வைத்துள்ளது. கொரோனா பரவல் அதிகமுள்ள 5 நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது.கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோபைடன் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போடுவது என்ற திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் காரணமாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்து வருகிறது. விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அமெரிக்க அரசு உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு குறித்து நிபுணர்களுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு அதிபர் ஜோபைடன் கூறியதாவது அரசின் நடவடிக்கையால் ஜனவரி மாதம் முதல் கொரோனாவால் உயிர் இழப்புகள் 90 சதவீதம் குறைந்துவிட்டது.இப்போது கொரோனாவுக்கு முன்பு இருந்தது போன்று மக்கள் வாழத்தொடங்கி இருக்கிறார்கள்.எங்கள் போர்க்கால முயற்சியின் காரணமாக 150 நாட்களில் கொரோனா பரவலை தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம்.

18.2 கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் 90 சதவீத மூத்தவர்களும், 27 வயதுக்கு மேற்பட்ட 70 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வார இறுதிக்குள் 16 கோடி பேர் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருப்பார்கள்.5 மாதங்களுக்கு முன்பு நாங்கள் பதவி ஏற்ற போது 3 கோடி பேர்தான் தடுப்பூசி போட்டிருந்தார்கள்.

ஜூலை 4-ந் தேதி அமெரிக்க சுதந்திர நாளுக்கு பிறகு, கொரோனாவில் இருந்தும் விரைவில் விடுதலை பெறப்போகிறோம் என்பதை மகிழ்ச்சியுடள் தெரிவிக்கிறேன். மார்ச் மாதத்தில் நாங்கள் நிர்ணயித்த குறிக்கோள் நிறைவேறப்போகிறது.

வணிகங்கள் மீண்டும் தொடங்கி உள்ளன. இதனால் முடங்கி இருந்த பொருளாதாரம் மீண்டும் அதிக வளர்ச்சி பெற்று வருகிறது. தற்போது கொரோனா முழுமையாக விலகவில்லை என்றாலும் அமெரிக்கா மீண்டு வருகிறது.இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய சாதனை. இதற்கு காரணம் அமெரிக்க மக்கள் தான்.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை. டெல்டா வைரஸ் மாறுபாடு காரணமாக ஏற்படும் சிக்கல் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இது எளிதில் பரவக் கூடியது. எனவே அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது நல்ல செய்தி. இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டால் மாறுபட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்காது.மே மாத தொடக்கத்தில் இருந்து கொரோனாவால் ஏற்படும் இறப்பு குறைந்துவிட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *