தமிழ் திரையுலகின் பிரபல டைரக்டர் கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை 3 மணியளவில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைதளங்கள் மூலமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடன் பணியாற்றிய நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட பலர், இந்த செய்தி நம்பமுடியாததாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். கவிஞர் வைரமுத்து தனது இரங்கல் கவிதையில், ‘விதவையான கேமரா கேவிகேவி அழுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிம்பு, ஸ்ரீகாந்த், நடிகைகள் கார்த்திகா, ராதிகா, குஷ்பு, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள நடிகர் மோகன்லால் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த பதிவில், “நம் கண்களில் இருந்து கே.வி. ஆனந்த் மறைந்திருந்தாலும் நம் உள்ளத்தில் என்றென்றும் நிறைந்திருப்பார். கே.வி.ஆனந்த் சார் நீங்கள் என்றென்றும் நினைவுகூரப்படுவீர்கள். அவரது ஆன்மாவுக்கு எனது பிரார்த்தனைகள்.” என்று தெரிவித்துள்ளார்.
மோகன்லால் நடிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான, ‘தென்மாவின் கொம்பத்து’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காக, கே.வி.ஆனந்த் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். மேலும் கே.வி.ஆனந்த் கடைசியாக இயக்கிய ‘காப்பான்’ படத்தில் மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Gone from our sight, but never from our hearts. K.V. Anand sir you will be missed forever. Prayers for the departed soul. Pranams 🙏 pic.twitter.com/q84wsusJDq
— Mohanlal (@Mohanlal) April 30, 2021