காசா நகர் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை

கடந்த 10-ந்தேதி பாலஸ்தீனத்தின் காசா நகரைச் சேர்ந்த ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.அப்போது தொடங்கி தற்போது வரை இரு தரப்பும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றன. காசா நகரில் இருந்து ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் நகரங்கள் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் போர் விமானங்கள் காசா நகர் மீது வான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இருதரப்பும் மோதலை கைவிட வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ ஹமாஸ் குழுவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை முழு வலிமையுடன் தொடரும் என சூளுரைத்தார்.அதன்படி மோதல் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத வகையில் நேற்று முன்தினம் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மிகவும் கடுமையான வான் தாக்குதல்களை நடத்தியது.‌இஸ்ரேலின் 50 போர் விமானங்கள் சுமார் 20 நிமிடங்களுக்கு காசா நகர் மீது இடைவிடாது குண்டு மழை பொழிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமை அதிகாலை தொடங்கி இரவு வரை இஸ்ரேல் ராணுவம் காசா நகர் மீதி 80 முறை வான் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது.ஹமாஸ் போராளிகள் குழுவின் நிலைகள் மற்றும் அந்த அமைப்பின் தலைவர்களின் வீடுகளை இலக்காக வைத்து இந்த வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.ஆனால் இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் காசா நகரில் முக்கியமான சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர்.இதற்கிடையில் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் நகரங்கள் மீது கொத்துக் கொத்தாக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.ஹமாஸ் ஏவிய ராக்கெட்டுகள் இஸ்ரேலின் ஆஹ்கேலோன், ஆஷ்தோத், நெடிவோட் ஆகிய நகரங்களையும், மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலின் பிற பகுதிகளையும் சென்று தாக்கின.ஆனாலும் இப்பகுதிகளில் காயமடைந்தவர்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த செய்தி எதுவும் வெளியாகவில்லை.கடந்த ஒரு வார காலத்தில் காசா பகுதியில் இருந்து பாலஸ்தீன ஆயுதக் குழுவினர் தங்கள் பகுதியை நோக்கி 3,000-க்கும் அதிகமான ராக்கெட்டுகளை ஏவித் தாக்கியுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.எனினும் நடுவானில் ராக்கெட்டுகளை இடைமறித்து அழிக்கும் இஸ்ரேலின் அயர்ன் டோம் பாதுகாப்பு அமைப்பு பெரும்பாலான ராக்கெட்டுகளை தடுத்து அழித்துவிட்டது. எனினும் சில வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் ஹமாஸ் ராக்கெட்டுகளால் சேதமடைந்துள்ளன.இதனிடையே கடந்த திங்கட்கிழமை முதல் நடந்து வரும் இருதரப்பு மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் காசா நகரில் இதுவரை 198 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர். இவர்களில் 58 பேர் சிறுவர்கள் ஆவர். அதேபோல் ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் தாக்குதலில் தங்கள் தரப்பில் இதுவரை 5 வயது குழந்தை உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *