காங்கோவில் தேர்தல் நாளன்று உயிரிழந்த அதிபர் வேட்பாளர்

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் 1979-ம் ஆண்டு முதல் அந்த நாட்டின் அதிபராக இருந்து வரும் சசவ் நுகுசோவை எதிர்த்து போட்டியிட்ட 6 வேட்பாளர்களில் முக்கியமானவராக கருதப்பட்டவர் கை பிரைஸ் பர்பைட் கோலஸ்.61 வயதான இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தனது இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்.

தனக்கு மலேரியா தாக்கி இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் கூறிய நிலையில், மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.அதனைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி படுக்கையில் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர் தான் சாவுடன் போராடிக்கொண்டிருப்பதாகவும், இருப்பினும் மக்கள் மாற்றத்துக்காக வாக்களிக்க வேண்டும் எனவும் பேசினார்.

இந்த நிலையில் தேர்தல் நாளான நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து உயர் சிகிச்சைக்காக அவரை பிரான்ஸ் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.அதன்படி காங்கோ தலைநகர் பிரஸ்சாவில்லேவில் இருந்து மருத்துவ விமானத்தில் கை பிரைஸ் பர்பைட் கோலஸ் பிரான்ஸ் புறப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் விமானத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.முக்கியத்துவம் வாய்ந்த அதிபர் வேட்பாளரான கை பிரைஸ் பர்பைட் கோலஸ், தேர்தல் நாளன்று உயிரிழந்த சம்பவம் அவரது ஆதரவாளர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *