கவிழ்ந்தது நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு

புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஒருவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் நாராயணசாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது என பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் எதிர்க்கட்சிகள் முறையிட்டன. இதையடுத்து அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக இன்று காலை புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது.இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்எல்ஏ நேற்று ராஜினாமா செய்துள்ளார். ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமி நாராயணன் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் வீட்டிற்கு சென்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.

இதன்மூலம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 13 ஆக குறைந்துள்ளது. சட்டசபையில் எம்எல்ஏக்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆக குறைந்துள்ளது.இந்த நிலையில் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசேனும் ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்து இல்லத்திற்கு சென்று ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். ஏற்கனவே 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் தற்போது திமுக எம்எல்ஏவும் ராஜினாமா செய்துள்ளார். திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆக குறைந்துள்ளது.இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் தொடங்கியது.

இக்கூட்டத்தில் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் நாராயணசாமி பேசினார். அப்போது அப்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்றும், ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாகவும் கூறினார். முந்தைய ஆளுநர் கிரண்பேடி மூலம் அரசுக்கு தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்ததாகவும் கூறினார்.அவரது உரையைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி அடைந்தது. இதையடுத்து அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து முதல்வர் நாராயணசாமி சட்டசபையை விட்டு வெளியேறினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *