கர்ணன் – திரை விமர்சனம்

தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள ஒரு சிறு கிராமத்திற்கு மறுக்கப்படும் அடிப்படைத் தேவைகளும், அதற்கு பின் உள்ள சமூகக் காரணத்தையும் கர்ணன் படத்தில் வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

ஒரு பின்தங்கிய கிராமத்தில் பேருந்து நிற்காமல் செல்வதால் ஏற்படும் பாதிப்புகளும், அதன் பின்னணியில் உள்ள காரணத்தையும் அறிந்து அவற்றை எதிர்த்துப் போராடும் ஓர் இளைஞனின் கதையே கர்ணன். கர்ணனின் போராட்டத்தால் அந்த ஊருக்குப் பேருந்து வந்ததா, இல்லையா என்பதே இதன் திரைக்கதையாக மலர்ந்துள்ளது.தென் தமிழகத்தின் நில அமைப்பில் நிலவி வரும் சமூக ஏற்றத்தாழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் கதையைத் தேர்வு செய்ததற்கு நடிகர் தனுஷுக்குப் பாராட்டு. அதீத நடிப்பைத் தெளிக்காமல் காட்சிக்குக் காட்சி பார்வையாளர்களைக் கட்டிப்போடும் அவரது உடல்மொழி கர்ணன் படத்திலும் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.

அடக்குமுறைகள் நிகழ்த்தப்படும்போது கோபம்கொண்டு வெடிப்பதாகட்டும், காதலி திரெளபதியிடம் காதல் செய்வதாகட்டும் தனுஷ் தனது நடிப்புத் திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகன் இதுவரை நடிக்காத பல காட்சிகள் படத்தில் உள்ளன. உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் நடிகர் தனுஷ், பாடலின் நடுவில் இறுதிச் சடங்கு செய்யும் காட்சி ஓர் உதாரணம்.
அவசியமில்லாமல் நாயகிகளைப் பயன்படுத்தும் பல படங்களுக்கு மத்தியில் ரஜிஷா விஜயன் அந்த பொடியன்குளம் ஊர்ப் பெண்ணாகவே மாறியுள்ளார். கண்களில் காதல் செய்வது, கோபத்தில் வெடிப்பது, காதலில் உருகுவது என அவருடைய நடிப்பு அருமை.

தாத்தாவாக லால், தனுஷின் அக்காவாக லட்சுமி ப்ரியா சந்திரமெளலி, 96 திரைப்படத்தில் கவனம் பெற்ற கெளரி, முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு, அதிகாரமிக்க காவல் அதிகாரியாக நட்டி என பலரது நடிப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படத்தின் மற்றொரு கதாநாயகன். கண்டா வரச் சொல்லுங்க, உட்ராதீங்க யப்போவ் போன்ற பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கதைக்களத்துக்கே நேரடியாக அழைத்து சென்ற அனுபவத்தைத் தந்துள்ளது. பின்னணி இசை படத்திற்குக் கூடுதல் பலம்.

காவல் நிலையத்தில் நடக்கும் கிராம மக்கள் மீதான தாக்குதல் மிக உயிரோட்டமுள்ள காட்சியாக உள்ளது. நான் நிமிர்ந்துட்டேன். இனி குனிய மாட்டேன் அவன் என் பேருக்காக என்னைய அடிச்சான் போன்ற வசனங்கள் படத்திற்கு மேலும் வலுச் சேர்த்துள்ளன.

அன்றாடம் எளிய மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்குப் பின்னணிக் காரணமாக இருக்கும் சாதி, எந்த அளவுக்கு வீரியமிக்கதாக உள்ளது என்பதைச் சொல்லும் படம் கர்ணன்.

முதல் பாதியில் கட்டிப்போட்ட கர்ணன் இரண்டாம் பாதியில் வழக்கமான கதாநாயகனுக்கான படமாக மாறி விட்டதோ என எண்ண முடியாமல் இல்லை. எனினும் அடுத்தடுத்த காட்சிகள் அந்த எண்ணத்தை அடித்துச் சென்று விடுவதால் அது பெரிய பலவீனமாகவும் இல்லை.

பரியேறும் பெருமாள் ஒற்றைத் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக கவனம் பெற்றவர் இயக்குநர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாளில் அடங்கி வாழ்ந்த நாயகன் பரிக்கும் சேர்த்து தனது இரண்டாம் படத்தில் கர்ணனை உயர வாள் ஏந்த வைத்து வெற்றி பெற வைத்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *