இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவியது.இதனால் அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்தன.மரபணுவில் மாற்றம் அடைந்த இந்த வைரஸ் முன்பைவிட 70 சதவீதம் வேகமாக பரவும் என்று தெரிவிக்கப்பட்டது. இதே போல் உருமாறிய கொரோனாவால் அதிக உயிரிழப்பு மற்றும் பாதிப்புகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்தனர்.இதனால் இங்கிலாந்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல் ஐரோப்பிய நாடுகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. உருமாறிய கொரோனா அதிக வீரியம் மிக்கதாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளும் பலன் அளிக்காமல் போகலாம் என்று விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்தனர்.இந்த நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களை எளிதாக தாக்க வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.தென் ஆப்பிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரசை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் குணம் அடைந்தவர்களையும் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கியுள்ளது நிரூபணமாகியுள்ளது.