“உனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா” என்றேன். நானிருக்கிறேன், நாங்களிருக்கிறோம் என்றபடி ஒரு சாமி என் அறையை விட்டு வெளியேறியது – நெகிழும் வசந்தபாலன்

தமிழ் திரையுலகில் ஆல்பம்,வெயில், காவியத் தலைவன், அங்காடித் தெரு என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார் வசந்தபாலன். இதனிடையே இயக்குனர் வசந்தபாலன் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து 20 நாட்கள் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீண்டார்.

இந்நிலையில், தான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தன்னுடைய நெருங்கிய நண்பரான இயக்குனர் லிங்குசாமி, மருத்துவர்களிடம் சிறப்பு அனுமதி பெற்று, பாதுகாப்பு கவச உடை அணிந்தபடி தன்னை வந்து பார்த்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் வசந்த பாலன்.இயக்குனர் வசந்த பாலன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “போன வாரத்தில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். இந்த செய்தி கேள்விப்பட்ட ஜீவன் ஒன்று இரவு முழுக்க நித்திரையின்றி, இரவு மிருகமாய் உழண்டவண்ணம் இருக்கிறது. விடிந்தும் விடியாமலும் அதன் கால்கள் மருத்துவமனைத் தேடி விரைகிறது.

எனைப் பார்க்க அனுமதிக்க வேண்டுமென மருத்துவமனை நிர்வாகத்திடம் போராடுகிறது. தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள ஒருவரைப் பார்க்க அனுமதிக்க இயலாது என்று மருத்துவமனை நிர்வாகம் மறுக்கிறது. இடையறாது சண்டக்கோழியாய் போராடுகிறது. உங்களை அனுமதித்தால் உங்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பரவாயில்லை சில நிமிடங்கள் அனுமதியுங்கள் என்று இறைஞ்சுகிறது.

வேறு வழியின்றி முழு மருத்துவ உடைகளுடன் அனுமதிக்கப்படுகிறது. மெல்ல என் படுக்கையை ஒட்டி ஒரு உருவம் நின்றபடியே எனைப்பார்த்த வண்ணம் இருக்கிறது. ஆண்பென்குவின் போன்று தோற்றமளிக்கிறது. எனையே உற்றுப்பார்த்த வண்ணம் இருக்கிறது. மருத்துவரா இல்லை செவிலியரா என்று எனக்கு வித்தியாசம் தெரியவில்லை.உள்ளிருந்து “டாக்டர்” என உச்சரிக்கிறேன். “லிங்குசாமிடா” என்றது அந்த குரல். அத்தனை சுவாசக்கருவிகளையும் மீறி மொத்த சக்தியையும் திரட்டி “டே! நண்பா” என்று கத்தினேன். “பாலா” என்றான் அவன் குரல் உடைந்திருந்தது. வந்திருவடா… “ம்” என்றேன். என் உடலைத் தடவிக்கொடுத்தான். எனக்காக பிரார்த்தனை செய்தான்.

என் உடையாத கண்ணீர்பாறையிலிருந்து ஒரு கண்ணீர்த்துளி கசிந்தது. தைரியமாக இரு என்று என்னிடம் சொல்லிவிட்டு செல்லும் போது, யாரிந்த தேவதூதன் என்று மனசு அலட்டியது. இந்த உயர்ந்த நட்புக்கு நான் என்ன செய்தேன் என்று மனம் முப்பது ஆண்டுகள் முன்னே பின்னே ஓடியது.”உனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா” என்றேன். நானிருக்கிறேன், நாங்களிருக்கிறோம் என்றபடி ஒரு சாமி என் அறையை விட்டு வெளியேறியது. கோடிக்கணக்கான நட்பின் கரங்கள் எனை அணைத்தது போன்று இருந்தது. ஆயிரம் முத்தங்கள் லிங்கு. ஆயிரம் ஆண்டுகள் புகழுடன் வாழ்வாய்.” இவ்வாறு வசந்தபாலன் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *