தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகி உள்ளார். அவரது நெருங்கிய நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவெறும்பூர் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவியை கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில், சென்னையில் நண்பர் உதயநிதி ஸ்டாலினை அன்பில் மகேஷ் சந்தித்தார். அப்போது, உதயநிதியின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைப்பதற்கு, பெரிய புகைப்படம் ஒன்றை நினைவுப்பரிசாக வழங்கினார். அதில்,
“மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்” -என்ற திருக்குறள் அச்சிடப்பட்டுள்ளது.
இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று சொல்லும்படி நடந்துகொள்வதுதான், ஒரு மகன் தன் தந்தைக்குச் செய்யும் உபகாரம் ஆகும். இந்த கருத்தை வெளிப்படுத்தும் வகையில் அன்பில் மகேஷ் அளித்த புகைப்படம் அமைந்திருந்தது. புகைப்படத்தை பெற்றுக்கொண்ட உதயநிதி நெகிழ்ந்துபோனார்.
இத்தகவலை அன்பில் மகேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். அதில், ‘கழக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சிறப்பு மிகுந்த புகைப்படத்தை, நானும், சபரிஸ் மாப்பிள்ளை அவர்களும் பரிசாக வழங்கினோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
கழக @dmk_youthwing செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்ட மன்ற உறுப்பினருமான திரு. @Udhaystalin அவர்களின் அமையவிற்கின்ற சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சிறப்பு மிகுந்த புகைப்படத்தை, நானும், சபரிஸ் மாப்பிள்ளை அவர்களும் பரிசாக வழங்கினோம். pic.twitter.com/4c9ZoTgecK
— Anbil Mahesh (@Anbil_Mahesh) May 12, 2021