இஸ்ரேல் பாதுகாப்பு படை மீண்டும் வான்வெளி தாக்குதல் காசா டவர் தரைமட்டமாக்கப்பட்டது

பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் தக்கபதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையில், பாலஸ்தீனியர்கள் தங்கள் மதத்தின் புனித மாதமாக கருதும் ஏப்ரல் மாத மையப்பகுதியில் ஜெருசலேமின் பழைய நகர் டமாஸ்கர் நுழைவாயில் அருகே அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் இரவு நேர வழிபாட்டிற்காக கூடுகின்றனர். ஆனால், அங்கு வழிபாடு செய்வதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தது. இதனால், வழிபாடுகளை முடித்துவிட்டு இரவு நேரத்தில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபடத் தொடங்கினர்.அதேவேளை, இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் யூதர்கள் தங்களுக்கு சொந்தமானது என்று கூறும் நிலத்தில் வசித்து வந்த பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்ற இஸ்ரேல் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துவந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து அல்-அக்‌ஷா மதவழிபாட்டு தலம் அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பெருமளவில் குவிந்த பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தை தடுக்க இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் முயற்சித்தனர். அப்போது, இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். ஷைக் ஜாரா மாவட்டத்தில் இஸ்ரேல், பாலஸ்தீன மக்களின் புனிதத்தளங்கள் அமைந்துள்ளதால் இரு தரப்புக்கும் இடையே மோதல்கள் அரங்கேறி வருகின்றன. இந்த மோதல்களை தொடர்ந்து பாலஸ்தீனர்க குடும்பங்களை வெளியேற்றுவது தொடர்பான வழக்கை இஸ்ரேல் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

இதற்கிடையில், கடந்த திங்கட்கிழமை அல்-அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் மோதல் வெடித்தது. பாலஸ்தீனர்கள் கற்கலைக்கொண்டு தாக்கினர். இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தினர். இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனைபகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நேற்று முன்தினம் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்தது. இஸ்ரேலிய பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இருதரப்பும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், காசா முனை பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை நேற்று மீண்டும் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காசா முனை பகுதியில் இருந்த 13 மாடி கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டது. காசா டவர் என்று அழைக்கப்படும் அந்த கட்டிடம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்கான அலுவலகம் செயல்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக அந்த 13 மாடி கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *