இலங்கை வரலாறு நன்மையானதோ தீமையானதோ அவை ஆவணமயப்படுத்தப்பட வேண்டும் – நூல் வெளியீட்டு விழாவில் விக்கினேஸ்வரன் எம் .பி பேச்சு

“அழிக்கப்படும் சாட்சியங்கள்” நூல் வெளியீடு யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்ற போது நிகழ்த்திய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.இந்த நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகளைத் தொடர்ந்து பல்வேறுபட்ட இளைஞர் யுவதிகள் வகைதொகையின்றி

இராணுவப் படைகளாலும் புலனாய்வுப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களைத் தேடி அலைந்த அவர்களின் பெற்றோர்கள், பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள்

எனப் பலர் தமது இறுதி மூச்சுவரை மகனை அல்லது மகளை அல்லது சகோதர சகோதரிகளை அல்லது உற்றவரை, உறவினரைத் தேடி அலைந்து, அவர்களுக்காக நீதிகோரிய போராட்டங்களில்

தொடர்ந்து ஈடுபட்டு இறுதியில் நோய் வாய்ப்பட்டு இறப்பைத் தழுவிக் கொண்ட 74 பேரின் பதிவுகள் இந்த நூலில் காணப்படுகின்றன.

ஏமாறிய நிலையில் இவ்வுலகைவிட்டு ஏகியவர்களின் விபரக்கோவையே இன்று வெளியிடப்படும் நூல்.பண்டைய தமிழ் மக்களின் வரலாறுகள், அவர்களின் இருப்புக்கள்,

பாரம்பரியங்கள்என்பன நூல் வடிவிலோ, ஓலைச் சுவடிகளிலோ அல்லது கற்களில் வடித்தோ முறையாக பேணப்படாமையால் இன்று எமது சரித்திர வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு வருகின்றன. தினம் தினம் மாற்றி எழுதப்பட்டு

வருகின்றன. பெரும்பான்மை மக்களின் சாசனங்கள்வாயிலாக வரலாறுகள் தமிழர்க்கு எதிராகத் திரிக்கப்பட்டு எழுதப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாது இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாகிய 3000 வருடங்கள்

பழைமை வாய்ந்த தமிழர்களின் வரலாறுகள் நீக்கப்பட்டு கிறீஸ்துவுக்குப் பின் 6 ம் நூற்றாண்டளவில் வழக்கிற்கு வந்த சிங்கள மொழி பேசுவோரே

இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் எனவும் தமிழ் மக்கள் அதன் பின்னைய காலங்களில் குடியேறிய மக்கள் எனவும் சிருஷ்டிக்க வருகின்றது.

இனப்படுகொலையின் ஒரு அம்சமாகவே இதனை நாம் பார்க்க வேண்டியுள்ளது.உலக சனத்தொகையில் தமிழர்களை விட குறைந்த அளவில் உள்ள சிங்கள மக்கள் ஓரளவிற்கு செறிந்து வாழுகின்ற இந்த நாட்டில்,

தமிழ் மக்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்துவிட்டால் சிங்கள மக்களுக்கு இருக்க நாடு இல்லாமல் போய்விடும்,அவர்களுக்கு என்று ஒரு தேசம் இல்லாமல் போய்விடும் எனப் பயப்படுகின்றார்கள் சிங்கள அரசியல்வாதிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும்.

இலங்கைத் தீவை விட சிறிய நாடாகிய சிங்கப்பூரில் பல மொழிகளைப் பேசுகின்ற பல் இன மக்கள் வாழுகின்ற போதும் அந்த நாட்டில் மொழி வேறுபாடு இல்லை மத வேறுபாடு இல்லை.ஆனால் அங்கு சுபீட்சம் நிலவுகின்றது. நாடும் வளம் பெற்று வளர்ந்து வருகின்றது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

ஆனால் எமது நாட்டில் இரண்டு பிரிவினர்களுக்கிடையே தான் பிரச்சனை வலுவடைந்துள்ளது. நிலவுகின்ற இந்தப் பிரச்சனையை தீர்த்து வைப்பது ஒரு காரியமே அல்ல. எனினும் தமிழ் மக்களுக்கு எதனையும் கொடுத்துவிடக்கூடாது

என்ற மனப்பாங்குடன் செயற்படும் சிங்களத் தலைவர்களின்பிழையான வழிகாட்டல்களே தமிழ் மக்கள் மீது பல விதமான ஒடுக்குமுறைகள் தலைவிரித்தாடக் காரணமாக இருந்து வந்துள்ளன.

யுத்தம் நிறைவு பெற்ற 2009ம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்திடம் தமது கணவரை முறையாக கையளித்த பெண்கள், பிள்ளைகளை கையளித்த தாய்மார்கள், சகோதரங்களைக் கையளித்த சகோதரர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் போன்றோரை கையளித்தவர்களை

இழிவுபடுத்தும் விதத்தில் அவ்வாறான கையளிப்புக்கள் எதுவும் நடக்கவில்லை அவ்வாறான எந்தவொரு அரசியல் கைதிகளும் தம்மிடம் இல்லை எனக் கூறி இப்போது மறுப்புத் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அது சம்பந்தமான விசாரணையை நடத்த வேண்டும் என்று உலக நாடுகள் கேட்டுவரினும் அக் கோரிக்கைகளுக்கு இணங்காது தான் தோன்றித்தனமாக இலங்கை அரசாங்கம் நடந்து வருகின்றது.

அதுபோலவே இன்றைய கை நூலில் ஆவணப்படுத்தப்படும் வரலாற்றுப் பதிவுகள் தொடர்ந்து எம் கைகளில் கிட்டாமல்ப் போனால் இன்னும் சற்றுக் காலம் செல்ல

இந்த நிகழ்வுகள் எல்லாம் பொய்யாகப் புனையப்பட்டவை என ஜெனீவாவிலும் உலக அரங்கிலும் கூறத் தொடங்கிவிடுவார்கள்.

ஆகவேதான் மரணித்தோரின் பதிவுகள் இந்நூலின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டு வருங்கால நிரூபணங்களாக பதியப்பட்டுள்ளன.

எனவே எமது வரலாறுகள் நன்மையானதோ தீமையானதோ அனைத்தும் ஆவணமயப்படுத்தப்பட வேண்டும் என்பது அத்தியாவசியமாகின்றது.

முன்னர் தான் நாம் எமது சரித்திரங்களை எழுதிவைக்கவில்லை. தொடர்ந்தும் அவ்வாறு வாளாதிருப்பது எமக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வளவு கோரக் கொடுமைகளின் பின்பும் தமிழ் மக்கள் அமைதியாக இங்கு இருந்து வருவது பிறநாட்டவர்க்கு வியப்பை அளித்தாலும்

ஏதோ ஒரு விடிவு காலம் அண்மையில் வரப் போகின்றது என்ற எண்ணமே எம் மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்து எம்மை ஓட்டி வருகின்றது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *