இலங்கை மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்-இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்

நான் அரசியல் செய்யவில்லை. நிர்வாகத்தையே முன்னெடுக்கின்றேன். எனவே, மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தினுடைய எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான சந்திப்பொன்று அட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தில் நேற்று (14) இடம்பெற்றது. இதன் போது திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் சீதா அறம்பேபொல வருகை தந்திருந்தார்.

இதன் போது தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தின் தற்போதைய மற்றும் கடந்த காலங்களில் இடம்பெற்ற செயற்பாடுகள் பற்றியும் மற்றும் மாணவர்களின் கற்கை நெறிகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.அத்தோடு, சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் நோர்வூட் தொண்டமான் விளையாட்டரங்கு ,ரம்போடை தொண்டமான் கலாச்சார நிலையம் அதே போல் பிரஜாசக்தி நிலையங்களுடைய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.இதேவேளை தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கற்கை நெறிகளை அமைச்சர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததோடு அங்கு இடம்பெறும் மாணவர்கள் பயிற்சிகளில் ஈடுப்படுவதையும் பார்வையிட்டனர்.இந் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், இலங்கைக்கான இந்திய கண்டி பிராந்திய பதில் உயர்ஸ்தானிகர் ராகேஷ் நட்ராஜ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர் டி.பி.ஜி குமாராசிரி, சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பணிப்பாளர் கணேஷ் ஈஸ்வரன் அதிகாரசபையின் தலைவர் காந்தி சௌந்தராஜன் அத்தோடு தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பணிப்பாளர்கள், உத்தியகத்தோர்கள் அட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தின் மாணவர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றி வருகின்றோம். அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்தோம். அந்த உறுதிமொழி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அதிலும் சிலர் குறை காண்கின்றனர். தொழிலாளர்களுக்கான நலன்கள் இல்லாதுபோய்விடும் எனவும் விமர்சிக்கின்றனர். நாம் தொழிலாளர்களை பாதுகாப்போம். எனினும், சந்தா வாங்கும் சிலர் தொழிலாளர்கள் நலன் பற்றி சிந்திப்பதில்லை.

நுவரெலியா மாவட்டத்தில் மலையகத்துக்கான பல்கலைக்கழகம் அமையவுள்ளது. ஒரு வருடகாலப்பகுதியில் எம்மால் முக்கியமான சில விடயங்களை நிறைவேற்றமுடிந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. மலையகத்தை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. எமது இளைஞர்களும் நம்புகின்றனர். நாம் மக்களுக்குதான் பதிலளிக்க வேண்டாம். வீண் விமர்சனங்களை முன்வைப்பர்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை.கொரோனா தடுப்பூசி உட்பட பல திட்டங்கள் இந்த அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்தாலும் ஆயிரத்து எட்டு குறைகளை கூறுபவர்கள் இருக்கவே செய்கின்றனர்.எதுஎப்படி இருந்தாலும் எமது சேவைகள் தொடரும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *