இறந்த தெருநாய்க்கு அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்!!!

நம்முடைய வீடுகளில் மிகவும் செல்லமாக வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணி நாய். பலருக்கும் மிகவும் பிடித்தது மட்டுமல்லாமல் வீட்டை காவல் காப்பதிலும் நாய்க்கு முக்கிய பங்கு உண்டு. நாய் நன்றியுள்ள பிராணி என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இப்படிப்பட்ட நாயை பலர் தங்களது குழந்தைகளை போலவே பராமரித்து வருகின்றனர்.

இப்படி செல்லமாக வளர்க்கப்பட்ட நாய் திடீரென இறந்ததால் அந்த நாய்க்கு முறைப்படி இறுதி மரியாதை செய்ததுடன், நாயின் இறப்பை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ராசிபுரத்தில் பிளக்ஸ் போர்டு வைத்து அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் உள்ள பட்டணம் ரோடு சக்தி விநாயகர் கோவில் அருகாமையில் விக்கி என்ற நாய் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் அப்பகுதி மக்களின் அனுசரணையுடன் இருந்தது. இரவில் வெளிநபர்கள் எவரையும் அந்த தெருவில் பிரவேசிக்கவிடாது. இதனால் திருடர் பயமின்றி அப்பகுதி மக்கள் நிம்மதியாக இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றிய விக்கி சிகிச்சையளித்தும் பலனின்றி இறந்துவிட்டது. இதனால் தனது உற்ற நண்பனை இழந்ததை போல் நாயின் உடலை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.

நாயின் உடலுக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நாய்க்கு இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடந்தது. மனிதர்களுக்கு செய்யப்படுவதைப்போன்று நாய்க்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. குழி தோண்டப்பட்டு, முறைப்படி நாயை அடக்கம் செய்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.விக்கி இறந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அதன் இறப்பை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், நாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் நாயின் உருவப்படத்துடன் ‘பிளக்ஸ் பேனர்’ வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *