இன்னும் சில மாதங்களில் மியான்மரில் மக்கள் பட்டினியில் சிக்கும் அபாயம்- சர்வதேச உணவு அமைப்பு

மியான்மர் நாட்டில் ஆங் சாங் சூகி கட்சியின் ஆட்சி இருந்த நிலையில் அந்த ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது. ராணுவத்தை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.அவர்களை ராணுவம் ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்து வருகிறது. இதுவரை 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்திற்கு எதிரான செயல்பாடுகளால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. இதன் காரணமாக மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. பெரும்பாலான மக்கள் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.மேலும் அனைத்து பொருட்களின் விலையும் மிக அதிகமாக உயர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் வாங்கும் சக்தியை இழந்து விட்டனர். வங்கிகளில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து செலவழித்து வருகிறார்கள்.பலருக்கு உணவு பொருட்கள் வாங்க கூட காசு இல்லை. இதனால் சாப்பிடுவதை குறைத்துக் கொண்டனர்.இதே நிலை நீடித்தால் இன்னும் சில மாதங்களில் பெரும்பாலான மக்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படும் என்று சர்வதேச உணவு அமைப்பு எச்சரித்துள்ளது. சுமார் 34 லட்சம் மக்கள் பட்டினியில் தள்ளப்படுவார்கள் என்று அந்த அமைப்பு கூறுகிறது. எனவே சர்வதேச சமுதாயம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது.கிராமப் பகுதிகளை விட நகரப்பகுதிகளில் மக்கள் வாங்கும் சக்தியை இழந்து தவிக்கிறார்கள். அரிசியை மட்டும் வாங்கி கஞ்சி காய்ச்சி அருந்துவதாகவும், காய்கறி வாங்க காசு இல்லை என்றும் மக்கள் பலர் கூறுகிறார்கள்.ராணுவமும் மக்களைப் பற்றி கவலைப்படாமல் அவர்களை ஒடுக்குவதிலேயே குறியாக இருக்கிறது. இதனால் மியான்மரில் இருக்கும் மக்களின் நிலை மிக மோசமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *