ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவ படைகள் திரும்ப பெறப்பட்டு வருகின்றன. இதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் தங்களது தாக்குதல்தளை தீவிரப்படுத்தி உள்ளனர்.ஆப்கானிஸ்தானில் உள்ள மற்ற நாடுகளுடனான எல்லைகளை கைப்பற்றி உள்ளனர். மேலும் காந்தகார் நகருக்குள் தலிபான்கள் நுழைந்துள்ளனர். இதனால் தலிபான்களுக்கும், அரசு படையினருக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது.ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மோதல் குறித்து செய்தி மற்றும் படங்களை சேகரிக்கும் பணியில் ரோய்ட்டர் செய்தி நிறுவனத்தின் ஊழியர் டேனிஷ் சித்திக் ஈடுபட்டு வந்தார்.
அவர் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான் எல்லையை ஓட்டியுள்ள ஸ்பின் போல்டாக் பகுதியில் நடந்த மோதலில் சிக்கி உயிரிழந்தார். தலிபான்கள் நடத்திய தாக்குதலில் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு இந்தியா, ஐ.நா. சபை, ஆப்கானிஸ்தான் அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் இந்திய பத்திரிக்கையாளரை நாங்கள் கொல்லவில்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறியதாவது இந்திய பத்திரிக்கையாளர் யாருடைய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார் என்பது எங்களுக்கு தெரியாது. அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. அவரது மரணத்துக்கு நாங்கள் வருந்துகிறோம்.
யுத்த பகுதிக்குள் நுழையும் எந்த பத்திரிக்கையாளரும் எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களை நாங்கள் சரியான முறையில் பாதுகாத்து கொள்வோம். பத்திரிக்கையாளர்கள் எங்களுக்கு தெரியாமல் போர் மண்டலத்திற்குள் நுழைகிறார்கள் என்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.
ஆனால் ஆப்கான் அரசு படை கமாண்டர் கூறும் போது, ஆப்கானிஸ்தான் சிறப்பு படையினர் ஒரு மார்க்கெட் பகுதியை மீட்டு சண்டையிட்ட போது, தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டதில் டேனிஷ் சித்திக் மற்றும் மூத்த ஆப்கான் அதிகாரி உயிரிழந்தனர் என்றார்.இதற்கிடையே ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி கூறியதாவது கடந்த மாதம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர்.
பயங்கரவாத அமைப்புகளுடன் உள்ள தொடர்பை பாகிஸ்தான் துண்டிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தலிபான்களை பாகிஸ்தான் வலியுறுத்தவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.