இந்திய தொடருக்கான இலங்கை அணிக்கு ‌தசுன் ஷனகா கேப்டனாக வாய்ப்பு

ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இலங்கை அணிக்கு குசல் பெரேராவுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் தசுன் ‌ஷனகா கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையடுத்து ஒப்பந்தத்தில் உள்ள 30 வீரர்களில் 29 பேர் கையெழுத்திட்டார்கள். முன்னாள் கேப்டன் மேத்யூஸ் தனிப்பட்ட காரணங்களால் இந்திய தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வீரர்கள் பெரும் சம்பளத்தை விட தங்களுக்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வீரர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்த கிரிக்கெட் வாரியம் கையெழுத்திட கடந்த 8-ந் தேதி வரை காலக்கெடு விதித்தது.

முதல் ஒருநாள் போட்டி வருகிற 13-ந் தேதி நடக்கிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடரில் விளையாடும் இலங்கை அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

முன்னதாக இலங்கை வீரர்களுக்கும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குசல் பெரேரா கடந்த மே மாதம் இலங்கையின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் வங்காளதேசம் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை விளையாடியது.

சமீபத்திய இங்கிலாந்து தொடரில் இலங்கை ஒரு வெற்றிகூட பெறவில்லை. மேலும் வீரர்கள்- கிரிக்கெட் வாரியத்துக்கு இடையே ஏற்பட்ட ஊதிய ஒப்பந்த பிரச்சினையில் அவர் முந்திய பங்கு வகித்ததாக கருதப்படுகிறது.

இதனால் அவருக்கு பதில் வேறு ஒருவரை கேப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 29 வயதான ஆல்-ரவுண்டர் தசுன் ‌ஷனகா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் கேப்டனாக பொறுப்பேற்றால் கடந்த 4 ஆண்டுகளில் இலங்கை அணிக்கு நியமிக்கப்பட்ட 6-வது கேப்டனாக இருப்பார். 2018-ம் ஆண்டு முதல் இலங்கை அணிக்கு தினேஷ் சண்டிமால், மேத்யூஸ், மலிங்கா, கருனரத்னே, குசல் பெரேரா ஆகியோர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *