இந்தியா முழுக்க கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை ஆரம்பம்-பிரதமர் மோடி துவங்கி வைப்பு!

கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோடி நாளை 16ம் திகதி துவக்கி வைக்க உள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனெகாவின் கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளித்தது. இது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால், கோவிஷீல்ட் என்ற பெயரில் தயாரிக்கப்படும் தடுப்பூசியாகும். மேலும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் முழுக்க உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் என்ற தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்விரு தடுப்பூசிகளும், அவசர கால தடுப்பூசிகளாகும். அதாவது அரசால் மட்டுமே இதை செயல்படுத்த முடியும். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற பல நாடுகளில் தடுப்பூசி பணிகள் ஆரம்பித்த நிலையில், இந்தியாவில் முதல் முறையாக நாளை தடுப்பூசி போடும் பணிகள் துவங்குகிறது. இதையொட்டி ஏற்கனவே இருமுறை, ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மருத்துவ பணியாளர்களுக்கு நல்ல பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தடுப்பூசி இயக்கத்தை, வீடியோ கான்பரன்ஸ் மூலம், ஒட்டு மொத்த நாட்டுக்கும், நாளை காலை 10:30 மணிக்கு துவங்கி வைப்பார்.அப்போது சில மருத்துவ ஊழியர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக உரையாடுவார். முதல் நாளில் 3 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளனர். முதலில் 1 கோடி சுகாதார ஊழியர்களுக்கும், சுமார் 2 கோடி முன்கள ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான செலவு அனைத்தையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது . அடுத்தகட்டமாக, 50 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட இணை நோய் உள்ள முதியவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி போடும் கால அவகாசம் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை தடுப்பூசி போடப்படும். வழக்கமான தடுப்பூசிகளுக்கு ஒதுக்கப்பட்ட தினங்களில் மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்படாது. கொரோனா வைரஸ் தடுப்பூசி, தடுப்பூசி போட பதிவு செய்ய வேண்டிய கோ-வின் செல்போன் செயலி மற்றும் சாப்ட்வேர் தொடர்பான சந்தேகங்களை 1075 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் அறியலாம். இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் கால்சென்டர் திறக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 166 மையங்களிலும் நாளை தடுப்பூசி போடப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் முதல் கட்டமாக 5.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *