இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது 20 ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 165 ரன் இலக்காக இருந்தது.
தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிகபட்சமாக 35 பந்தில் 46 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் மார்கன் 28 ரன்னும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், சாஹல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.பின்னர் விளையாடிய இந்திய அணி 13 பந்து எஞ்சியிருந்த நிலையில் வெற்றி பெற்றது. 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது.கேப்டன் விராட் கோலி 49 பந்தில் 73 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), இஷான் கிஷன் 32 பந்தில் 56 ரன்னும் (5 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 3-வது ஆட்டம் நாளை நடக்கிறது.