இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே மோசமாக அமைந்தது. தொடக்க வீரரான கேஎல் ராகுல் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்து வீச்சில் போல்ட் முறையில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 5 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் அடில் ரஷித் பந்து வீச்சில் வெளியேறினார். தவான்-4, ரிஷப் பண்ட்- 21 ஆகியோரும் அடுத்தடுத்து வெளியேறினர்.ஹர்த்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 36 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் பென் ஸ்டோக்ஸ், மார்க்வுட், அடில் ரஷித், ஜோர்டான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.இதனையடுத்து 125 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, துவக்க வீரர்கள் ஜேசன் ராய் (49), ஜோஸ் பட்லர் (28) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், வெற்றிக்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ ஜோடி வெற்றியை உறுதி செய்தது. 16வது ஓவரில் மாலன் சிக்சர் அடிக்க, இங்கிலாந்து அணி 130 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேவிட் மாலன் 24 ரன்களுடனும், பேர்ஸ்டோ 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி, 5 போட்டி கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.