இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய கடைசி ஆட்டத்தில் இந்தியா திரில் வெற்றி- ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றியது

இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்  1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று பகல்-இரவு ஆட்டமாக புனேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் 329 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 78 ரன்கள் விளாசினார். ஷிகர் தவான் 67 ரன்களும், ஹர்திக் பாண்டியா 64 ரன்களும், ரோகித் சர்மா 37 ரன்களும், ஷர்துல் தாகூர் 30 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.இதையடுத்து 330 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே சறுக்கியது. துவக்க வீரர்கள் ஜேசன் ராய் 14 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோ ஒரு ரன்னிலும் வெளியேறினர். இந்த இரு விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார் வீழ்த்தினார். அதன்பின்னர் பென் ஸ்டோக்ஸ்-டேவிட் மாலன் ஜோடி நிதானமாக விளையாடியது. இவர்களில் பென் ஸ்டோக்ஸ் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் (15), லிவிங்ஸ்டன் (36) ஆகியோரை ஷர்துல் தாகூர் அவுட் ஆக்கினார். அதன்பின்னர் அரை சதம் அடித்த டேவிட் மாலனும், ஷர்துல் தாகூரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.168 ரன்களில் 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால் இங்கிலாந்து தடுமாறியது. அதன்பின்னர் விக்கெட்டை காப்பாற்ற சாம் கர்ரன் கடுமையாக போராடினார். நெருக்கடிக்கு மத்தியிலும் அரை சதம் கடந்த அவர் சதத்தை நெருங்கினார். மறுமுனையில் மொயீன் அலி 29 ரன்களிலும், அடில் ரஷித் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரை நடராஜன் வீசினார். யார்க்கராக வீசிய முதல் பந்தில் சாம் கர்ரன் ஒரு ரன் எடுத்தார். ஆனால் இரண்டாவது ரன் எடுக்கும் முயற்சியின்போது, மார்க் வுட் ரன் அவுட் செய்யப்பட்டார்.இரண்டாவது பந்தை எதிர்கொண்ட டோப்லே ஒரு ரன் எடுத்தார். அடுத்த 2 பந்துகளை தவறவிட்ட சாம் கர்ரன், 5வது பந்தில் பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் ரன் எடுக்கவில்லை. இதனால் அந்த ஓவரில் இங்கிலாந்து 6 ரன்களே எடுத்தது. 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 322 ரன்கள் எடுத்தது. கடைசி வரை போராடிய சாம் கர்ரன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்த ஆட்டத்தில், இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன், 3 போட்டி கொண்ட தொடரையும் 2-1 என கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *