இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்களை எடுத்திருந்தது. ஸ்மித் 31 ரன்களிலும் லபுசேன் 67 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும், மறுபுறம் நிலைத்து நின்ற ஸ்மித் சதம் கடந்து அசத்தினார். கடைசி வரை களத்தில் இருந்த அவர் 131 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் எடுத்தது
அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதானமாக ஆடியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே 5 ரன்களிலும் புஜாரா 9 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. நிதானமாக ஆடிய ரகானே 22 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹனுமா விஹாரி 4 ரன்னில் ரன் அவுட்டானார். பொறுமையாக ஆடிய புஜாரா, சுப்மன் கில் இருவரும் 50 ரன்கள் எடுத்தனர். இந்த ஜோடி பிரிந்தவுடன் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா அணி 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது. .94 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர்களான வார்னர் 13 ரன்னிலும் புகோவ்ஸ்கி 10 ரன்னிலும் வெளியேறினர். அடுத்த விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சுமித் மற்றும் லபுசேன் பொறுப்புடம் விளையாடினர்.மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்தது. சுமித் 29 ரன்னிலும் லபுசேன் 47 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.