கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தான். இந்நிறுவனம் உலகின் பல நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி தயாரித்துக்கொடுக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கிடையில், நல்லெண்ண அடிப்படையில் பிரேசில், பூடான், மாலத்தீவுகள், வங்காளதேசம், நேபாளம், மியான்மர், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசி வழங்கி வருகிறது. இந்தியாவின் இந்த செயலுக்கு பல நாடுகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்வதில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்க்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் கூறுகையில், ’கொரோனாவுக்கு எதிரான உலகலாவிய நடவடிக்கைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி. தகவல்களை பரிமாறிக்கொள்தல் மற்றும் இணைந்து செயல்படுதல் மூலமே இந்த வைரசை தடுத்து மனித உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்றமுடியும்’ என்றார்.