ஆஸ்திரேலியா அரசு புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது அதில் ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள் இணைப்புகள் ஆகியவற்றை தங்களின் இணைய தளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி கட்டணம் செலுத்த வேண்டும் என்று அச்சட்டம் கூறுகிறது . ஆனால் அதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் தங்களின் கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றன.இந்த சட்டம் கடினமானதாக இருப்பதாகவும் நாட்டு மக்கள் தங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை பாதிக்கும் என தெரிவித்துள்ளன. இது தொடர்பான செனட் விசாரணைக்கு ஆஜரான கூகுள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பிரிவின் நிர்வாக இயக்குனர் மெல் சில்வா புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடல் சேவையை ரத்து செய்வதை தவிர எங்கள் நிறுவனத்துக்கு வேறு வழியில்லை என கூறினார். மேலும் கூகுள் சர்ச் என்ஜின் நிறுத்தபடும்பட்சத்தில் அது கூகுளுக்கு மட்டுமின்றி ஆஸ்திரேலிய மக்களையும் கடுமையாக பாதிக்கும் என தெரிவித்தார்.கூகுள் நிறுவனத்தின் விளக்கத்துக்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் கூகுள் நிறுவனத்தின் மிரட்டலுக்கு அரசு அஞ்சாது என கூறியுள்ளார். அரசு வகுத்துள்ள விதிகளின்படி மட்டுமே நீங்கள் செயல்பட முடியும் எனவும் புதிய சட்டம் நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் அரசின் சட்ட திட்டங்களுக்குட்பட்டு செயல்படவேண்டியது அவசியம் என கூகுள் நிறுவனத்துக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.