ஆப்பிரிக்காவில் 5 லட்சம் பேர் தண்ணீர் இல்லாமல் தவிப்பு

ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ குடியரசு நாட்டில் உள்ள நயிரா காங்கோ எரிமலை 10 நாட்களுக்கு முன்பு வெடித்து சிதறியது.இந்த மலைக்கு அருகே கோமா நகரம் உள்ளது. அங்கு 20 லட்சம் பேர் வசிக்கிறார்கள். எரிமலை வெடித்து லாவா குழம்புகள் பெரிய அளவில் வெளியேறியது.அது கோமா நகருக்குள் புகுந்தது. இதில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோரை காணவில்லை.எரிமலை தொடர்ந்து வெடித்து சிதறி வருகிறது. மேலும் அந்த பகுதியில் நில நடுக்கமும் ஏற்படுகிறது. இதனால் எந்த நேரத்திலும் மீண்டும் பெரிய அளவில் எரிமலை வெடிக்கலாம் என கருதி கோமா நகர மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி பக்கத்து பகுதிகளில் தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கோமா நகரின் கிழக்கு பகுதியில் உள்ள மக்களே பெரும்பாலும் வெளியேறி இருக்கிறார்கள். மற்றவர்கள் நகரிலேயே தங்கி உள்ளனர்.எரிமலையால் நகருக்கு செல்லும் தண்ணீர் குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஊரில் உள்ளவர்களுக்கும், நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கும் அத்தியாவசிய தேவைக்கும், குடிக்கவும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் 5 லட்சம் பேர் தவிக்கிறார்கள். அவசர தேவைக்குகூட தண்ணீர் கிடைக்காததால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கியுள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் அசுத்தமாக இருக்கிறது.எனவே காலரா நோய் பரவ வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர். இதை தடுப்பதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *