ஆசிய எதிர்ப்பு இனவெறிக்கு ஜோ பைடன் கடும் கண்டனம்

அமெரிக்காவில் அண்மைக்காலமாக ஆசிய அமெரிக்கர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கொரோனோ வைரஸ் பரவ தொடங்கியதற்கு பிறகு இது போன்ற தாக்குதல்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.‌ஆசிய நாடுகளின் மக்களாலேயே கொரோனா வைரஸ் பரவியது என்கிற தவறான கண்ணோட்டத்தில் அவர்கள் மீது வெறுப்புணர்வு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனை கண்டித்து அமெரிக்காவில் உள்ள ஆசிய அமெரிக்க சங்கங்கள் மற்றும் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவில் ஆசிய அமெரிக்கர்களால் நடத்தப்படும் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.இதில் 6 ஆசிய அமெரிக்க பெண்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

துப்பாக்கிச்சூடு நடத்திய 21 வயதான ராபர்ட் ஆரோன் லாங்கை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் துப்பாக்கிச்சூடு நடந்த அட்லாண்டா நகருக்கு நேற்று நேரில் சென்றனர்.அங்கு அவர்கள் ஆசிய-அமெரிக்க தலைவர்கள் மற்றும் மாகாண சட்டசபை உறுப்பினர்களை நேரில் சந்தித்து இனவெறி தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து நீண்டதொரு விவாதம் நடத்தினர்.

சுமார் 80 நிமிடம் நீடித்த இந்த சந்திப்புக்குப் பிறகு ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.அப்போது ஜோ பைடன் ‘‘ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு குற்றங்கள் கொரோனா தொற்று நோய்களின் போது அதிகரித்துள்ளன. இனவெறி என்பது நம் தேசத்தை நீண்டகாலமாக வேட்டையாடிய மற்றும் பாதித்த ஒரு அசிங்கமான விஷம் ஆகும். இதனை முறியடிக்க அமெரிக்கர்கள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்’’ என கூறினார்.

அதனைத் தொடர்ந்து வெறுப்புணர்வுக்கு எதிராக பேசுமாறு அமெரிக்கர்களை வலியுறுத்திய ஜோ பைடன் இனவெறி சம்பவங்களை காணும் போது அமெரிக்க மக்கள் அதற்கு எதிராக எழுந்து நிற்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.தொடர்ந்து பேசிய அவர் ‘‘இனவெறிக்கு நமது மவுனம் உடந்தையாக இருக்கிறது. நாம் உடந்தையாக இருக்க முடியாது. அவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்; பலிகடாவாக்கப்பட்டார்கள்; துன்புறுத்தப்பட்டார்கள்; அவர்கள் வாய்மொழியாக தாக்கப்பட்டனர்; உடல்ரீதியாக தாக்கப்பட்டனர்; கொல்லப்பட்டனர். ஆசிய அமெரிக்கர்கள் அச்சத்தின் கதைகளைக் கேட்பது இதயத்தை நொருக்குவதாக உள்ளது’’ என்றார்.

அமெரிக்க துணை ஜனாதிபதி பதவியை வகிக்கும் முதல் தெற்காசிய வம்சாவளிப் பெண்ணான கமலா ஹாரிஸ் இதுகுறித்துக் கூறுகையில் ‘‘துப்பாக்கிச்சூட்டின் நோக்கம் விசாரணையில் இருந்தாலும் உண்மைகள் தெளிவாக உள்ளன. கொல்லப்பட்ட 8 பேரில் 6 பேர் ஆசிய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் பெண்கள். அமெரிக்காவில் இனவாதம் உண்மையானது. அது எப்போதும் இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஜீனோபோபியா உண்மையானது. எப்போதும் இருந்து வருகிறது’’ என்றார்.

‘‘ஜனாதிபதியும் நானும் அமைதியாக இருக்க மாட்டோம். நாங்கள் அதற்கு துணை நிற்க மாட்டோம். வன்முறை, வெறுக்கத்தக்க குற்றங்கள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக நாங்கள் எப்போதும் பேசுவோம். அது எங்கு எப்போது நிகழ்ந்தாலும்’’ எனவும் கமலா ஹாரிஸ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *