அழகி போட்டியில் உலகளாவிய ஆதரவை நாடிய மியான்மர் அழகி

பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஹாலிவுட் நகரில் உள்ள ராக் ஓட்டல் அண்ட் கேசினோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. இதில் மியான்மர் நாட்டின் சார்பில் துசர் விண்ட் லவின் என்கிற அழகி பங்கேற்றார். இவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாத போதும் சிறந்த தேசிய ஆடைக்கான விருதை வென்றார்.அவர் மியான்மரின் பாரம்பரிய உடையில் மேடையில் அழகு நடை போட்டு வந்த போது ‘‘மியான்மருக்காக பிரார்த்தியுங்கள்’’ என்கிற பதாகையை கையில் ஏந்தி வந்தார். அதன் பின்னர் அவர் பேசியபோது ‘‘எங்கள் மக்கள் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருக்கிறார்கள். ராணுவத்தால் சுடப்படுகிறார்கள். மியான்மரை பற்றி பேச அனைவரையும் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.‌ பிரபஞ்ச அழகியின் மியான்மர் போட்டியாளர் என்கிற முறையில் ஆட்சி கவிழ்ப்பு முதல் என்னால் முடிந்த வரை நான் பேசிக்கொண்டு இருக்கிறேன். எல்லோரும் மியான்மருக்காக பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என கூறினார்.‌மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதும், ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் மக்களை ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி கொல்வதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *