அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் ஜனவரி 20-ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
ஆனால், தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
மேலும், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தி நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்குகள் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், ஜோ பைடன் வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழை வழங்க எந்த தடையும் விதிக்கப்போவதில்லை என துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வாஷிங்டன்னில் வெள்ளைமாளிகைக்கு வெளியே திரண்டிருந்த ஆதராவாளர்களை அதிபர் டிரம்ப் சந்தித்தார். அப்போது டிரம்ப் பேசியதாவது நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டோம். நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். நாம் தேர்தல் திருட்டை தடுத்து நிறுத்துவோம்.மைக் பென்ஸ் எங்களுக்காக வர வேண்டும்.
அவர் அவ்வாறு செய்யாவிட்டால் அது நமது நாட்டுக்கு சோகமான நாளாக அமையும். எனென்றால் அரசியலமைப்பை பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.
டிரம்பின் பேச்சால் உணர்ச்சிவசப்படும் அவரது ஆதரவாளர்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்று வந்தது.
காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் துணை அதிபர் மைக் பென்ஸ் தேர்தலில் வெற்றிபெற்ற பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறை நடந்து வந்த நிலையில் திடீரென பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
அவர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர். அவர்களை தடுக்க போலீசார் முயற்சித்தபோதும் அவர்களது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
அங்கு வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை உடைத்து எறிந்து கொண்டு அவர்கள் உள்ளே நுழைந்தனர்.இதனால், பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒரு படுகாயமடைந்தார். அவர் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தகவலை சிஎன்என் செய்தி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. பாராளுமன்றத்தை முற்றுகையிட்டபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே வாஷிங்டனில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது