அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் (குடியரசு கட்சி) தோல்வி அடைந்தார். ஆனால் தனது தோல்வியை ஏற்க மறுத்து தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது எதுவும் நிறைவேறவில்லை. இதையடுத்து கடந்த ஜனவரி 20-ந் தேதி அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோபைடன் பதவி ஏற்றார்.
இந்தநிலையில் 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு சாதகமாக முடிவுகளை கொண்டுவர ரஷ்ய அதிபர் புதின் முயற்சிகள் மேற்கொண்டார் என்று அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.
தேசிய புலனாய்வு இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட 15 பக்க அறிக்கையில் அதிபர் தேர்தலில் டிரம்புக்கு பயன் அளிப்பதற்காக ரஷிய அதிபர் புதின் தேர்தலில் தலையீட்டை மேற்பார்வையிட்டார் அல்லது குறைந்த பட்சம் ஒப்புதல் அளித்தார் என்று தெரிவித்துள்ளது.
2019-ம் ஆண்டு டிரம்பின் வக்கீல் ரூடி கியுலியானியை ஆண்ட்ரி டெக்காக் சந்தித்தார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கை காரணமாக ரஷியா மீது அமெரிக்கா அடுத்த வாரம் பொருளாதார தடைகள் விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஜோபைடன் தனது பிரசாரத்தின் போது அதிபர் தேர்தலில் ரஷிய தலையீடு உள்ளது என்று குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.