அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷியாவுக்கு கடும் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ந் தேதி பதவி ஏற்றார். அப்போது அந்த நாட்டை கொரோனா தொற்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. இப்போது அந்த தொற்றில் இருந்து அமெரிக்கா மீண்டுவந்து விட்டது.இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது முதல் வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். 8 நாள் ஐரோப்பிய பயணத்தில் முதல் கட்டமாக அவர் நேற்று இங்கிலாந்து சென்றார். மனைவி ஜில் பைடனுடன் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் அவர் சபோல்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளமான மில்டன்ஹாலில் வந்து தரை இறங்கினார்.அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐரோப்பிய பயணத்தின் இறுதிகட்டமாக சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகருக்கு செல்லும் ஜோ பைடன், அங்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசுகிறார். பருவநிலை மாற்றம், உக்ரைனில் ரஷிய ராணுவ தலையீடு, ரஷியாவின் சட்டவிரோத இணைய தள தாக்குதல், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னி விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவர் புதினுடன் விவாதிப்பார் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் சபோல்கில் அமெரிக்க விமானப்படை தளத்தில் அவர் அமெரிக்க படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பேசினார். அப்போது அவர் ரஷியாவை கடுமையாக எச்சரித்தார். அவர் கூறியதாவது ரஷிய அதிபர் புதினை சந்திக்கிறபோது ஒரு தெளிவான செய்தியை வழங்கப்போகிறேன். நாம் ரஷியாவுடன் மோதலை எதிர்பார்க்கவில்லை.ரஷிய அரசானது தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் அமெரிக்கா வலுவான பதிலடி கொடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

இங்கிலாந்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கும் ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் ஜோ பைடன் கலந்து கொள்கிறார். கொரோனா வைரஸ் தொற்று உலகை ஆட்டிப்படைக்கத்தொடங்கிய பின்னர் உலகத்தலைவர்கள் இந்த மாநாட்டில் முதன்முதலாக நேருக்கு நேராக சந்தித்துப்பேச உள்ளதால் இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நடத்துகிற இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, ஐரோப்பிய கூட்டமைப்பின் சார்பில் ஐரோப்பிய கமிஷனின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *