அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் கோர விபத்து 13 பேர் பலி பலர் படுகாயம்

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் மெக்சிகோ நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. 8 அல்லது 9 பேர் மட்டுமே அமரக்கூடிய இந்த காரில் 25 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது.இந்தநிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தறிகெட்டு ஓட தொடங்கியது. பின்னர் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு எதிர்ப்புற சாலையில் கார் பாய்ந்தது.

அதன் பின்னரும் நிற்காமல் ஓடிய கார் எதிர் திசையில் வந்த ஒரு லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த பலர் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். லாரிக்கு அடியில் சிக்கி கார் முற்றிலும் உருக்குலைந்து போனது.‌இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் லாரி டிரைவர் உட்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே 8 அல்லது 9 பேர் மட்டுமே அமரக்கூடிய காரில் 25 பேர் பயணம் செய்தது போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. மெக்சிகோ எல்லையை தாண்டி சட்ட விரோதமாக நுழைந்த அகதிகளிடம் பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களை காருக்குள் அடைத்து அமெரிக்காவுக்குள் கொண்டு சென்றபோது விபத்து நேரிட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே அந்தக் கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *