அமெரிக்காவுக்கு பதிலடி அமெரிக்க தூதர்கள் 10 பேரை வெளியேற்றுகிறது ரஷியா

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தலையிட்டது மற்றும் அமெரிக்க அரசுத் துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக ரஷியாவைச் சேர்ந்த 32 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ரஷியாவை சேர்ந்த தூதரக அதிகாரிகள் 10 பேர் நாட்டை விட்டு வெளியேற அமெரிக்க அரசு உத்தரவிட்டது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த ரஷியா இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தது.ஆனாலும் ரஷியாவுடன் மோதலை விரும்பவில்லை என்றும் அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புவதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.இந்தநிலையில் அமெரிக்காவின் பொருளாதார தடை விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடியாக, மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வரும் தூதரக அதிகாரிகள் 10 பேரை நாட்டை விட்டு வெளியேற்றப்போவதாக ரஷியா கூறி உள்ளது. அவர்கள் விரைவில் ரஷியாவை விட்டு வெளியேறுவார்கள்.அதுமட்டுமின்றி அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் 8 பேரின் பெயரை தடை செய்யப்பட்டவர்களுக்கான பட்டியலில் சேர்த்துள்ளது. இதன்மூலம் இந்த 8 பேரும் ரஷியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 8 பேரில் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லண்ட், மத்திய புலனாய்வு இயக்குனர் கிறிஸ்டோபர் வேரே மற்றும் அமெரிக்க உள்நாட்டு கொள்கை ஆலோசகர் சூசன் ரைஸ் ஆகியோரும் அடங்குவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *