அமெரிக்காவில் மேலும் 28 சீன பெருநிறுவனங்களுக்கு தடை விதிப்பு

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மோதல் போக்கு நீடித்தவண்ணம் உள்ளது. கடந்த டொனால்ட் டிரம்ப் ஆட்சியின்போது அமெரிக்காவில் சீன செயலிகள் பல தடை செய்யப்பட்டன. பாதுகாப்பு கருதி ஹேக்கிங் முறைகேட்டில் ஈடுபடும் சீன செயலிகள் அமெரிக்காவில் இயங்கத் தடை விதிக்கப்பட்டது.மேலும், 31 சீன பெருநிறுவனத்தின் பங்குகளை அமெரிக்க தொழிலதிபர்கள் வாங்கக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது. அந்த நிறுவனங்கள் சீன ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாக கருதப்படுகின்றன.

சீனாவின் பெருநிறுவனங்களான சீனா மொபைல், ஹிக்விஷன், சீனா ரெயில்வே கன்ஸ்ட்ரக்சன் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் டிரம்பின் உத்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்டன. அமெரிக்க பங்குச் சந்தையில் சீன நிறுவனங்கள் பல கடும் நஷ்டத்தை இதனால் சந்திக்க நேரிட்டது. இது சீனாவை அதிருப்தி அடைய செய்திருந்தது.இந்நிலையில், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன், மேலும் 28 சீன நிறுவனங்கள் மீது தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் தடை செய்யப்பட்ட சீன நிறுவனங்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் பாதுகாப்பு அல்லது ஜனநாயக மதிப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அடக்குமுறை அல்லது கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு பயன்படுத்தப்படும் சீன கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *