அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் பலி

கடந்த வாரம் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில் உள்ள மூன்று மசாஜ் பார்லர்களில் வாலிபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 ஆசிய பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இது அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்தநிலையில் அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.கொலராடோ மாகாணத்தில் போல்டர் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் புகுந்தார். அங்கிருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.

இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் பலர் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து மர்ம நபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கி சூட்டில் போலீஸ் அதிகாரி எரீக்டேலி என்பவர் உயிரிழந்தார்.

பின்னர் மர்ம நபரை மடக்கி பிடித்து கைது செய்தார்கள். அப்போது அந்த நபர் ரத்த காயத்துடன் காணப்பட்டார். சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 9 பேர் பலியானார்கள். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.இச்சம்பவம் குறித்து போலீஸ் தலைமை அதிகாரி மாரிஸ் ஹெரால்டு கூறும்போது, ‘‘சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் எங்களது போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மர்ம நபரை காயத்துடன் பிடித்துள்ளோம்’’ என்றார்.மர்ம நபர் துப்பாக்கி சூட்டை ஏன் நடத்தினார்? என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இச்சம்பவம் நடந்த கொலரோடா மாகாண கவர்னர் ஜாரெட் பொலிஸ் கூறும்போது, ‘‘இந்த நிகழ்வை பார்க்கும்போது என் இதயம் உடைந்து போகிறது. இது புத்தியில்லாத சோகம்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *