கன்னித்தமிழின் குலு குலு திரைவிமர்சனம்

இளம் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் முதல் முறையாக சந்தானம் நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் குலு குலு. இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரத்னகுமார் மற்றும் சந்தானத்தின் கூட்டணியில் உருவாகியுள்ள முதல் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை குலு குலு படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க பார்க்கலாம்.. அமேசான் காட்டில் பிறந்த கூகுள் (சந்தானம்) அங்கு ஏற்படும் பிரச்சனைகளின் காரணமாக தனது தாய்யை இழக்கிறார். இதுமட்டுமின்றி அங்கிருந்து கடற்கொள்ளையர்களால் கடத்தப்படும் கூகுள் வெவ்வேறு நாட்டில் நாடோடியாக பயணம் செய்து இளைஞன் ஆனதும் சென்னையில் தனக்கென்று ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கேயே வாழ்ந்து வருகிறார்.உதவி என்று யார் வந்து கேட்டாலும் எதையும் எதிர்பார்க்காமல் செய்கிறார் கூகுள். இப்படி சென்றஇடமெல்லாம் யாருக்காவது உதவி செய்துகொண்டே இருக்கும் கூகுளிடம் ஒரு நாள், தங்களது நண்பன் கடத்தப்பட்டுவிட்டான் என்று கூறி உதவி கேட்டு சில இளைஞர்கள் வருகிறார்கள். உடனடியாக அவர்களுக்கு உதவி செய்ய புறப்படும் கூகுள், இந்த பயணத்தில் அந்த இளைஞர்களுடன் இணைந்து அவர்களுடைய நண்பனை கண்டுபிடித்தாரா? இல்லையா? இந்த பயணத்தில் அவர் சந்தித்த இன்னல்கள் எல்லாம் என்னென்ன? என்பதே படத்தின் கதை.

கன்னித்தமிழின் திரைவிமர்சனம் “வலிமை”

நீண்ட இடைவெளிக்குப்பின் திரைக்கு வந்திருக்கும் அஜித்தின் ´வலிமை´´படத்தின் கதையை பார்ப்போம்:- மதுரையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் அஜித், அம்மா, அண்ணன், தம்பி, அக்கா என்று வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் கொலம்பியாவில் இருந்து பாண்டிச்சேரிக்கு போதைப் பொருட்கள் வருகிறது. பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு போதைப்பொருட்கள் எடுத்து செல்லும் போது, பைக்கில் வரும் மர்ம இளைஞர்கள் அதை கடத்துகிறார்கள். இந்நிலையில் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்படுகிறார் அஜித். ஒருநாள் மேன்சனில் தற்கொலை செய்த நபரை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார் அஜித். அப்போது அந்த தற்கொலையின் பின்னணியில் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் கடத்தலில் பைக் கேங் தலைவன் கார்த்திகேயா ஈடுபடுவதை கண்டுபிடிக்கிறார் அஜித்.இறுதியில் பைக் கேங் கும்பலின் தலைவன் கார்த்திகேயாவை அஜித் கைது செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.படத்தில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார் அஜித். ஆக்சன், காமெடி, சென்டிமென்ட், நடனம் என அனைத்திலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பைக் ஆக்சன் காட்சியில் மிரள வைத்திருக்கிறார். அண்ணன், தம்பி பாசத்தில் நெகிழ வைத்திருக்கிறார் அஜித். வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவரது உடல் அமைப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. நாயகியாக வரும் ஹுமா குரேஷி, ஆக்சனில் மாஸ் காண்பித்திருக்கிறார். போலீஸ் அதிகாரிகளாக வரும் செல்வா, ஜி.எம்.சுந்தர், தினேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். போதைப்பொருள், பைக் கொள்ளையர்களை மையமாக வைத்து கிரைம் திரில்லர் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வினோத். விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து ரசிகர்களை கட்டி போட்டு இருக்கிறார் இயக்குனர். பைக் சாகசங்கள் அனைத்து ரசிக்கும்படி உள்ளது. கிரைம் திரில்லர் மட்டுமில்லாமல், அம்மா மகன், அண்ணன் தம்பி பாசம் என அனைத்து ரசிகர்களும் கவரும் விதத்தில் படத்தை உருவாக்கி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் புகுந்து விளையாடியுள்ளார் பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. மொத்தத்தில் ‘வலிமை’ வெற்றியாளன்

கன்னித்தமிழின் திரைவிமர்சனம் “மாநாடு”

வெளிநாட்டில் பணியாற்றும் சிம்பு, தன் நண்பனின் திருமணத்திற்காக கோயம்புத்தூருக்கு வருகிறார். திருமணம் செய்யப்போகும் பெண்ணை கடத்தி அவளை காதலிக்கும் தன் நண்பன் பிரேம்ஜியுடன் சேர்த்து வைக்க திட்டம் போடுகிறார். திட்டமிட்டபடி திருமணப் பெண்ணை கடத்தி செல்லும் வழியில் ஒரு விபத்து ஏற்படுகிறது.இந்த விபத்து மூலம் போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவிடம் சிம்பு மற்றும் நண்பர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். நண்பர்களை பணைய கைதியாக வைத்து முதலமைச்சரை கொலை செய்ய சொல்கிறார் எஸ்.ஜே.சூர்யா. நண்பர்களை காப்பாற்ற வேறு வழியில்லாமல் முதலமைச்சரை சுட்டு கொல்கிறார் சிம்பு. அதன்பின், போலீஸ் சிம்புவை கொன்று விடுகிறது.விழித்து பார்த்தால் சிம்பு மீண்டும் விமானத்தில் பயணிக்கிறார். இந்த நிகழ்வு மீண்டும் நடக்கிறது. அப்போது, டைம் லூப்பில் தான் சிக்கி இருப்பதை சிம்பு உணர்கிறார். இதையடுத்து இதிலிருந்து விடுபட சிம்பு முயற்சி செய்கிறார். இறுதியில் டைம் லூப்பில் இருந்து சிம்பு விடுபட்டாரா? தானும் தப்பித்து முதலமைச்சரையும் காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.சிம்பு தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். அவருக்கு இணையாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மிரட்டி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் காட்சிகள் தான் அதிகம். இருவருக்கும் மாநாடு பெயர் சொல்லும் அளவிற்கு அமைந்திருக்கிறது. இவர்கள் தவிர ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ், உதயா, வாகை சந்திரசேகர் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். கதாநாயகியாக வரும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு பெரிய வேலையில்லை.ரொம்பவும் சிக்கலான, ஒரு சவாலான கதையை எடுத்துக்கொண்டு இயக்குனர் வெங்கட் பிரபு, அதை புரியும் வகையில் படமாக்கியிருப்பது சிறப்பு . படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஒரே சீரான வேகத்தில் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். குழப்பம் இல்லாத திரைக்கதை என கைத்தட்டல் பெற்றிருக்கிறார் வெங்கட் பிரபு சபாஷ் வெங்கட் பிரபு. பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார் யுவன். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. மொத்தத்தில் ‘மாநாடு’ சிம்புவுக்கு திருப்புமுனை

கன்னித்தமிழின் திரை விமர்சனம்- ‘எனிமி’

ஒரே ஊரில் வசிக்கும் தம்பி ராமையாவின் மகன் விஷால், பிரகாஷ் ராஜின் மகன் ஆர்யா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளதால் இவர்களின் நட்பு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. பிரகாஷ் ராஜ் போலீஸ் அதிகாரியாக இருப்பதால் இருவருக்கும் பயிற்சி கொடுக்கிறார். திடீரென பிரகாஷ் ராஜ் கொலை செய்யப்படுவதால், நண்பர்கள் இருவரும் பிரிகிறார்கள். அதன்பின் வளர்ந்து பெரிய ஆளாக இருக்கும் விஷால், சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில், மினிஸ்டர் ஒருவரை கொலை செய்யும் முயற்சி நடக்கிறது. இதை விஷால் தடுக்கிறார். கொலை முயற்சியில் ஈடுபட்டது ஆர்யா என்று விஷாலுக்கு தெரிய வருகிறது.இறுதியில் ஆர்யா கொலை முயற்சியில் ஈடுபட காரணம் என்ன? நண்பர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? பிரகாஷ் ராஜின் கொலை பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.படத்தில் விஷால், ஆர்யா இருவரும் அவர்களுக்கே உரிய பாணியில் போட்டி போட்டு நடித்து அசத்தியிருக்கிறார்கள். ஆக்‌ஷன் காட்சிகளில் இருவரும் அதகளப்படுத்துகிறார்கள்.நாயகியாக வரும் மிர்ணாளினி ரவி கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் மம்தா மோகன்தாஸ் மனதில் நிற்கிறார். பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் ஆனந்த் சங்கர். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஆர்யா, விஷால் இருவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார். துப்பறியும் காட்சிகளின் திரைக்கதை சுவாரஸ்யமாக செல்வது படத்திற்கு பெரிய பலம். தமன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் சாம்.சி.எஸ் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. மொத்தத்தில் ‘எனிமி’ வெற்றி பெற்றுள்ளான்

கன்னித்தமிழின் திரை விமர்சனம்- ‘அண்ணாத்த’

அநியாயத்தை தட்டிக்கேட்கும் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த். மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கும் இவர், தங்கை கீர்த்தி சுரேஷ் மீது அளவற்ற பாசம் வைத்திருக்கிறார். வெளியூரில் படிக்கும் தங்கை கீர்த்தி சுரேஷ் விடுமுறையில் ஊருக்கு வரும்போது திருவிழா போல் கொண்டாடுகிறார். இதேபோல் கீர்த்தி சுரேஷும் அண்ணன் மீது பாசமழை பொழிகிறார். உயிருக்கு உயிராக இருக்கும் தங்கைக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளை தேடுகிறார். ஒரு வழியாக மாப்பிள்ளையை கண்டுபிடித்து திருமணம் செய்து வைக்கும் நிலையில் பிரச்சனை ஏற்படுகிறது.இறுதியில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை. காளையன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ரஜினிகாந்த். தனக்கே உரிய பாணியில் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் அசத்தி இருக்கிறார். ஊர் மக்களுக்கு போராடுவது, தங்கை மீது பாசம் காட்டுவது, எதிரிகளை துவம்சம் செய்வது, நயன்தாராவுடன் ரொமான்ஸ் என்று திரையில் ஜொலிக்கிறார். தங்கையாக வரும் கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அண்ணன் மீது பாசம், காமெடி என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.வழக்கறிஞராக வரும் நயன்தாரா, அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். ரஜினியுடன் நடிக்கும் காட்சிகளில் ரசிக்க வைத்து இருக்கிறார். குஷ்பு மற்றும் மீனா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். வில்லனாக வரும் ஜெகபதி பாபு கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து பல படங்கள் வந்திருந்தாலும், ரஜினிக்கேற்ற கதைக்களத்துடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சிவா. முதல் பாதியை ரசிகர்களுக்கு ஏற்றவாறு கமர்ஷியலாக கொடுத்து இருக்கிறார்.இடைவேளைக்கு 10 நிமிடத்திற்கு முன்பாக கதைக்குள் அழைத்து செல்லும் இயக்குனர், பிற்பாதியில் ரசிகர்களை கட்டிப் போட முயற்சி செய்திருக்கிறார். தேவையற்ற காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவோடு திரையில் பார்க்கும் போது கலர்புல்லாக இருக்கிறது. மொத்தத்தில் ‘அண்ணாத்த’ யில் இயக்குனர் சிறுத்தை சிவா சறுக்கியுள்ளார்.

கன்னித்தமிழின் திரை விமர்சனம் – ஜெய் பீம்

தமிழ் சினிமாவில் குறிஞ்சி மலர் பூப்பது போல் எப்போதாவது தான் மனதில் நிற்பது போல் கதையம்சம் கொண்ட படங்கள் வரும் அந்த வரிசையில் வந்துள்ள படம் தான் “ஜெய் பீம்” திரைப்படம்.படத்தின் கதையை பார்ப்போம் கோணமலை பகுதியில் மனைவி செங்கேணி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார் பழங்குடியைச் சேர்ந்த ராஜாக்கண்ணு. இவர் ஒரு நாள் ஊர் தலைவர் வீட்டிற்கு பாம்பு பிடிக்கச் செல்கிறார் ராஜாக்கண்ணு. அதன்பின் சில நாட்களில் ஊர் தலைவர் வீட்டில் இருக்கும் நகைகள் திருடுபோகிறது. இதற்கு காரணம் ராஜாக்கண்ணுதான் என்று முடிவு செய்து போலீஸ் அவரை தேடுகிறது. அதே நேரம் ராஜாக்கண்ணு வெளியூரில் வேலைக்கு செல்கிறார். வீட்டில் அவர் இல்லாததால் மனைவி செங்கேணி மற்றும் உறவினர்களை போலீஸ் அழைத்து சென்று கொடுமை படுத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் ராஜாக்கண்ணு கிடைத்துவிட, திருடியதை ஒப்புக்கொள்ள சொல்லி அடித்து துன்புறுத்துகிறார்கள். இந்நிலையில், ராஜாக்கண்ணு மற்றும் உறவினர்கள் லாக்கப்பில் இருந்து தப்பித்து ஓடிவிட்டதாக போலீஸ் சொல்கிறார்கள். ராஜாக்கண்ணுவை தேடும் மனைவி, வழக்கறிஞர் சந்துரு உதவியை நாடுகிறார். இறுதியில் ராஜாக்கண்ணுவை கண்டுபிடித்தார்களா? ராஜாக்கண்ணுக்கு என்ன ஆனது? நகைகளை திருடியது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.படத்தில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார் நடிகர் சூர்யா. சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் இப்படம் அவருக்கு பேர் சொல்லும் படமாக அமையும் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை ராஜாக்கண்ணு கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார் நடிகர் மணிகண்டன். போலீசிடம் அடிவாங்கும் போது பரிதாபத்தை ஏற்படுத்துகிறார். மணிகண்டனுக்கு பேர் சொல்லும் படமாக இப்படம் அமைந்திருக்கிறது. படத்திற்காக மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் மணிகண்டன். இவரது மனைவியாக வரும் லிஜோமோல் ஜோஸ், செங்கேணி கதாபாத்திரத்திற்கு சிறந்த தேர்வு. நிறைமாத கர்ப்பிணி பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறார். கணவனுக்காக போலீசிடம் அடிவாங்குவது என நடிப்பில் அசத்துகிறார் . போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். எஸ்.ஐ.யாக வரும் தமிழரசன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ரஜிஷா விஜயன், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், எம்.எஸ்.பாஸ்கரன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.இருளர்கள் மீது தொடர்ந்து சுமத்தப்படும் பொய் வழக்குகள், காவல்நிலையத்தில் அவர்கள் மீது நடத்தப்படும் அத்துமீறல்கள், சித்ரவதைகள், மரணங்கள் என படத்தை செதுக்கி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பழங்குடியின மக்கள் காவல்துறையால் அனுபவித்த கொடுமைகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். காவல்துறையின் அயோக்கியத்தனத்தை முதல்காட்சியிலேயே இயக்குனர் தோலுரித்துக் காட்டுகிறார். அதே சமயம் நல்ல போலீஸ் அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பதையும் காண்பிக்க தவறவில்லை.கதிரின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் கதையை தாங்கி பிடித்திருக்கிறது. மொத்தத்தில் “ஜெய் பீம்” பழங்குடி மக்களின் வலியை கச்சிதமாக நம் முன்னே காட்டும் உண்மைக்காவியம்.

கன்னித்தமிழின் திரை விமர்சனம்- உடன்பிறப்பே

அண்ணன் தங்கை பாசத்தை எடுத்துரைக்கும் “உடன்பிறப்பே” எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.சசிகுமாரும், ஜோதிகாவும் அண்ணன் தங்கை. ஜோதிகாவிற்கும் சமுத்திரகனிக்கும் திருமணம் நடைபெறுகிறது. வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் சமுத்திரகனி, ஒரு பிரச்சனையில் ஜோதிகாவை அழைத்து சென்று விடுகிறார். இதனால், அண்ணன் சசிகுமாரும், தங்கை ஜோதிகாவும் பிரிந்து பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கிறார்கள்.இறுதியில் இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்ததா? பிரிய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. அண்ணன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் சசிகுமார். ஊர் மக்கள் பிரச்சனையில் தலையிடுவது, அடிதடி என்று கெத்தாகவும், தங்கைக்காக விட்டுக்கொடுக்கும் பாசமிகு அண்ணனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தங்கையாக வரும் ஜோதிகா பல இடங்களில் முதிர்ச்சியான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவரது அறிமுக காட்சி சிறப்பு. அண்ணன் மீதான பாசத்தில் இவரது செயல்கள் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது.ஆசிரியராக மனதில் பதிகிறார் சமுத்திரகனி. சாதுவாக இயல்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். வழக்கமான சமுத்திரகனியாக இல்லாமல் வித்தியாசமாக நடித்து கவர்ந்திருக்கிறார். சூரியின் காமெடி காட்சிகள் படத்திற்கு பலம். அதுபோல் கலையரசன் நல்லவனாகவும், கெட்டவனாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். சசிகுமாரின் மனைவியாக வரும் சிஜா ரோஸ் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்.அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன். பல இடங்களில் சென்டிமென்ட் காட்சிகள் ரசிக்க வைக்கிறது, மொத்தத்தில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக உடன்பிறப்பே அமைந்துள்ளது.

கன்னித்தமிழின் திரை விமர்சனம் – அரண்மனை 3

ஊரில் ஜமீன்தாராக இருக்கும் சம்பத், ஒரு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க செல்கிறார். சென்ற இடத்தில் மணப்பெண்ணான ஆண்ட்ரியாவின் அழகில் மயங்கி அவரை திருமணமும் செய்து விடுகிறார். இவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் ஆண்ட்ரியா இறந்துவிடுகிறார். அந்த குழந்தை தான் ராஷி கன்னா. மனைவி ஆண்ட்ரியாவை இழந்ததால் மகள் ராஷி கன்னா மீது அதிக பாசம் இல்லாமல் இருக்கிறார் சம்பத். பள்ளிப் பருவத்தை எட்டிய ராஷி கன்னா, தனது அரண்மனையில் பேய் இருப்பதாக கூறி ஹாஸ்டலில் தங்குகிறார். படிப்பு முடிந்தபிறகே அரண்மனைக்கு திரும்புகிறார். இதற்கிடையே, அரண்மனையில் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்க வருகிறார் ஆர்யா. ஜமீன்தாரின் உறவுக்காரர் சுந்தர்.சி.யும் வந்து சேர, திரைக்கதை விறுவிறுப்படைகிறது. அரண்மனையில் அமானுஷ்ய சக்தி இருப்பதை அறியும் இவர்கள், இரண்டு பேய்கள் இருப்பதையும் கண்டுபிடிக்கிறார்கள். இறுதியில் அந்த இரண்டு பேய்கள் யார்? எதற்கு அரண்மனையில் தங்கி இருக்கின்றன? பேய்களை விரட்டினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆர்யா, முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். நாயகியாக வரும் ராஷி கன்னா, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். அழகால் கவரும் ஆண்ட்ரியா, பின்னர் பேயாக வந்து மிரட்டவும் செய்கிறார்.நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு, மனோபாலா, நளினி ஆகியோரின் காமெடி திரைக்கதைக்கு பெரிதும் உதவி இருக்கிறது. நடிகர்கள் சம்பத், வேலராமமூர்த்தி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.அரண்மனை 1 மற்றும் 2 பாகங்களை தொடர்ந்து 3ம் பாகத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. முந்தைய பாகங்களை விட இப்படத்தை பிரம்மாண்டமாக கொடுத்து இருக்கிறார். தனக்கே உரிய பாணியில் நடித்தும் அசத்தி இருக்கிறார். குறிப்பாக கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறப்பு. படத்திற்கு பெரிய பலம் கிராபிக்ஸ் காட்சிகள். பல இடங்களில் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை பிரம்மாண்டமாக உருவாக்கி அதகளப்படுத்தி இருக்கிறார் சுந்தர்.சி. மொத்தத்தில் அரண்மனை 3 சுந்தர் சியின் வெற்றிப்பட வரிசையில் இடம்பிடிக்கும் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.