கன்னித்தமிழின் திரை விமர்சனம் – ஜெய் பீம்

தமிழ் சினிமாவில் குறிஞ்சி மலர் பூப்பது போல் எப்போதாவது தான் மனதில் நிற்பது போல் கதையம்சம் கொண்ட படங்கள் வரும் அந்த வரிசையில் வந்துள்ள படம் தான் “ஜெய் பீம்” திரைப்படம்.படத்தின் கதையை பார்ப்போம் கோணமலை பகுதியில் மனைவி செங்கேணி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார் பழங்குடியைச் சேர்ந்த ராஜாக்கண்ணு. இவர் ஒரு நாள் ஊர் தலைவர் வீட்டிற்கு பாம்பு பிடிக்கச் செல்கிறார் ராஜாக்கண்ணு. அதன்பின் சில நாட்களில் ஊர் தலைவர் வீட்டில் இருக்கும் நகைகள் திருடுபோகிறது. இதற்கு காரணம் ராஜாக்கண்ணுதான் என்று முடிவு செய்து போலீஸ் அவரை தேடுகிறது.

அதே நேரம் ராஜாக்கண்ணு வெளியூரில் வேலைக்கு செல்கிறார். வீட்டில் அவர் இல்லாததால் மனைவி செங்கேணி மற்றும் உறவினர்களை போலீஸ் அழைத்து சென்று கொடுமை படுத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் ராஜாக்கண்ணு கிடைத்துவிட, திருடியதை ஒப்புக்கொள்ள சொல்லி அடித்து துன்புறுத்துகிறார்கள்.

இந்நிலையில், ராஜாக்கண்ணு மற்றும் உறவினர்கள் லாக்கப்பில் இருந்து தப்பித்து ஓடிவிட்டதாக போலீஸ் சொல்கிறார்கள். ராஜாக்கண்ணுவை தேடும் மனைவி, வழக்கறிஞர் சந்துரு உதவியை நாடுகிறார். இறுதியில் ராஜாக்கண்ணுவை கண்டுபிடித்தார்களா? ராஜாக்கண்ணுக்கு என்ன ஆனது? நகைகளை திருடியது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.படத்தில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார் நடிகர் சூர்யா. சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் இப்படம் அவருக்கு பேர் சொல்லும் படமாக அமையும் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை

ராஜாக்கண்ணு கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார் நடிகர் மணிகண்டன். போலீசிடம் அடிவாங்கும் போது பரிதாபத்தை ஏற்படுத்துகிறார். மணிகண்டனுக்கு பேர் சொல்லும் படமாக இப்படம் அமைந்திருக்கிறது. படத்திற்காக மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் மணிகண்டன். இவரது மனைவியாக வரும் லிஜோமோல் ஜோஸ், செங்கேணி கதாபாத்திரத்திற்கு சிறந்த தேர்வு. நிறைமாத கர்ப்பிணி பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறார். கணவனுக்காக போலீசிடம் அடிவாங்குவது என நடிப்பில் அசத்துகிறார் .

போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். எஸ்.ஐ.யாக வரும் தமிழரசன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ரஜிஷா விஜயன், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், எம்.எஸ்.பாஸ்கரன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.இருளர்கள் மீது தொடர்ந்து சுமத்தப்படும் பொய் வழக்குகள், காவல்நிலையத்தில் அவர்கள் மீது நடத்தப்படும் அத்துமீறல்கள், சித்ரவதைகள், மரணங்கள் என படத்தை செதுக்கி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பழங்குடியின மக்கள் காவல்துறையால் அனுபவித்த கொடுமைகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். காவல்துறையின் அயோக்கியத்தனத்தை முதல்காட்சியிலேயே இயக்குனர் தோலுரித்துக் காட்டுகிறார். அதே சமயம் நல்ல போலீஸ் அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பதையும் காண்பிக்க தவறவில்லை.கதிரின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் கதையை தாங்கி பிடித்திருக்கிறது.

மொத்தத்தில் “ஜெய் பீம்” பழங்குடி மக்களின் வலியை கச்சிதமாக நம் முன்னே காட்டும் உண்மைக்காவியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *