மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டு காவலில் வைத்தது. ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தை ராணுவம் கொடூரமாக அடக்கியது. இதில், சுமார் 850 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது; தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது; காலனித்துவ கால அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தை மீறியது உள்பட 6 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. வழக்கு விசாரணையை ராணுவ அரசு 14-ந்தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தும் பாதுகாப்பு படையினர்இந்நிலையில், ஆங் சான் சூகி மற்றும் முன்னாள் அதிகாரிகள் மீது புதிய ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆங் சான் சூகி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்ததற்கான ஆதாரங்களை ஊழல் தடுப்பு ஆணையம் கண்டறிந்திருப்பதாகவும், அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் 55-ன் கீழ் குற்றம்சாட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.