அமெரிக்காவில் தவற விட்ட லாட்டரிச்சீட்டுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு உரியவரிடம் ஒப்படைத்த இந்தியருக்கு பெருகும் பாராட்டு

அமெரிக்காவில் மசாசூசெட்சில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஷா குடும்பத்தினர் கடை வைத்துள்ளனர். இந்த கடையில் வாடிக்கையாளரான லீ ரோஸ் பீகா என்ற பெண், ஒரு லாட்டரிச்சீட்டை வாங்கினார். அவசர அவசரமாக லாட்டரிச்சீட்டின் ரகசிய எண்ணை சுரண்டிப்பார்த்ததில் பரிசு விழவில்லை என எண்ணி, அந்தச்சீட்டை கடைக்காரரிடம் தந்து விட்டு நடையை கட்டினார்.

அதை வாங்கிய கடைக்காரரும் ஒரு மூலையில் போட்டார்.ஆனால் ஒரு மாலைப்பொழுதில் குவியாகக்கிடந்த பழைய லாட்டரிச்சீட்டுகளை அகற்றினர். அப்போது ரகசிய எண்ணை சரியாக சுரண்டிப்பார்த்திராத ஒரு சீட்டைக் கண்டெடுத்து, சோதித்தபோது அதற்கு 1 மில்லியன் டாலர் பரிசு விழுந்திருந்தது  தெரியவந்தது.அந்தச்சீட்டை அபிஷாவின் தாயார் அருணா ஷாதான், லீ ரோஸ் பீகாவுக்கு விற்றிருந்தார் என தெரிந்தது.

உடனே மிகுந்த நேர்மையுடன் லீ ரோஸ் பீகாவை அபிஷா குடும்பத்தினர் நேரில் வரவழைத்து அவரது பரிசுச்சீட்டை ஒப்படைத்தனர். அதைப்பார்த்து, ‘‘இப்படியும் நேர்மையான மனிதர்களா?” என வியந்துபோன லீ ரோஸ் பீகா, அவர்களைக் கட்டித்தழுவி பாராட்டினார்.

இதுபற்றிய செய்தி அங்கு உள்ளூர் ஊடகங்களில் வெளியானது. அதைத் தொடர்ந்து அபிஷா குடும்பத்தினர் நேர்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.இதுபற்றி அபிஷா கூறுகையில், “அந்தப் பரிசு சீட்டை நான் வைத்திருந்தால்கூட இந்த அளவுக்கு பிரபலமாகி இருக்க மாட்டேன். ஆனால் உரியவரிடம் ஒப்படைத்ததால் மிகவும் பிரபலமாகி விட்டேன். அதைத் திருப்பித்தந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *