சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து இன்று 27 ஆம் திகதி அவர் விடுவிக்கப்படுவார் என்று சிறைத்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது.இந்நிலையில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் நேற்று அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் முடிவு வந்தது.பின்னர்.போதிய வசதியில்லாததால் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை 6.30 மணி அளவில் சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவனை அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் ‘‘சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். சர்க்கரையின் அளவு சற்று அதிகமாக உள்ளது. நுரையீரல் தொற்று மேலும் பரவாமல் தடுக்க சசிகலாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபப்டுவதாக ’’ அதில் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சசிகலாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சிறையில் இருந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது என்பது கேள்வியாகவே இருந்தது .தற்போது சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக நீங்கியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு சீராக இருக்கிறது. ஆக்சிஜன் அளவு சீராக உள்ளது. ஊன்றுகோல் உதவியுடன் அவர் நடக்கிறார்.
சசிகலா சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளிப்பதாக விக்டோரியா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.இந்தநிலையில் சசிகலாவின் தண்டனை காலம் இன்று முடிந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவரை அங்கிருந்தபடியே விடுதலை செய்ய சிறைத்துறை முடிவு எடுத்தது.இதையடுத்து சசிகலாவை விடுதலை செய்வதற்கான பணிகள் தொடங்கின. நேற்று விடுமுறை தினம் என்பதால் நேற்று முன்தினம் சசிகலா விடுதலை தொடர்பான ஆவணங்களை சிறைத்துறை அதிகாரிகள் தயார் செய்தனர்.
இன்று காலை 9.20 மணிக்கு சிறைத்துறை அதிகாரிகள் ஜெயிலில் இருந்து, சசிகலா சிகிச்சை பெறும் விக்டோரியா அரசு மருத்துவ மனைக்கு புறப்பட்டனர். 10.30 மணிக்கு அவர்கள் மருத்துவமனையை அடைந்தனர்.அங்கு சில ஆவணங்களில் சிறைத்துறை அதிகாரிகள் கையெழுத்து வாங்கினர்.இதையடுத்து சசிகலா தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்டார். சசிகலா விடுதலை செய்யப்பட்ட தகவலை சிறைத்துறை அதிகாரிகள் உள்துறையிடம் தெரிவித்தனர்.சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவை சந்திக்க சென்றபோது டி.டி.வி.தினகரன், வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனும் ஆகியோரும் சென்று சசிகலாவை சந்தித்தனர்.
சசிகலாவுக்கு இதுவரை இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சிறைத்துறை போலீஸ் பாதுகாப்பும், பெங்களூரு போலீஸ் பாதுகாப்பும் அவருக்கு போடப்பட்டு இருந்தது. தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு சிறைத்துறை போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இனி அவரது பாதுகாப்பை பெங்களூரு போலீசார் கவனித்துக்கொள்வார்கள்.சசிகலா அரசியல் தலைவர் என்பதால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவரது வக்கீல் வாசுகி ராஜராஜன், கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பான மனு மத்திய உள்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு கடந்த 21-ந்தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் என்று அறிக்கை வந்தது. அதன்பிறகு அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை எடுக்கவில்லை.சசிகலா தற்போது தண்டனை முடிந்து விடுதலை ஆகிவிட்டதால் அவர் இனி சுதந்திரமாக எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம். அவர் விடுதலை செய்யப்பட்ட தகவல் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா விடுதலை செய்யப்பட்டாலும் இன்னும் சில நாட்கள் அவர் பெங்களூரிலேயே தங்கி சிகிச்சை பெறுவார். பிப்ரவரி மாதம் முதல்வாரம் அவர் சென்னை திரும்ப முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. சசிகலாவுடன் தண்டனை பெற்ற இளவரசிக்கு பிப்ரவரி 5-ந் தேதி தண்டனை காலம் முடிகிறது.இதையடுத்து அவர் விடுதலை செய்யப்படுவார். எனவே இளவரசியுடன் சேர்ந்து சசிகலா சென்னை திரும்புகிறார்.சசிகலா விடுதலை செய்யப்பட்ட தகவலை அறிந்ததும் அ.ம.மு.க. தொண்டர்கள் கட்சி கொடியுடன் ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டனர். அவர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.