பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு

நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜான்கேபே மாகாணத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் புகுந்தனர்.அப்போது பள்ளி அருகில் இருந்த ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் பள்ளியில் இருந்த 317 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.

பள்ளிக்குள் பயங்கரவாதிகள் பல மணி நேரம் இருப்பதற்காக வெளியில் இருந்த பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியபடி இருந்தனர். இதனால் மாணவிகளை கடத்தி செல்வதை தடுக்க முடியவில்லை.பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 317 மாணவர்களை மீட்கும் நோக்கில் ஒரு கூட்டு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் போலீசார் தொடங்கியுள்ளனர்” என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் முகமது ஷெஹு தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 42 பேர் கடத்தப்பட்டனர். அவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கடத்தல் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த நாட்டின் அதிபர் முகமது புகாரி, கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை பத்திரமாக மீட்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.‌

அதன்படி மாணவிகளை கடத்தி சென்ற பயங்கரவாதிகளுடன் மாகாண அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிப்பதற்கு பயங்கரவாதிகள் ஒப்புக்கொண்டனர்.

அதன்படி பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 279 மாணவிகளும் நேற்று விடுவிக்கப்பட்டதாக ஜம்பாரா மாகாண கவர்னர் பெல்லோ மாதவல்லே அறிவித்தார். 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்று குறிப்பிட்ட அவர் கடத்தப்பட்ட 279 பேரும் விடுவிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘கடத்தப்பட்ட மாணவிகள் விடுவிக்கப்பட்ட செய்தி என் இதயத்தை மகிழ்விக்கிறது. இதை நான் உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது மாணவிகள் அனைவரும், அரசு நல விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர்’’ என தெரிவித்துள்ளார்.

அதேபோல் மாணவிகள் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிபர் முகமது புகாரி கூறுகையில் ‘‘மாணவிகள் விடுதலையான செய்தியில் நான் மகிழ்ச்சியை உணர்ந்தேன். எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் மாணவிகளின் சோதனையானது மகிழ்ச்சியான முடிவுக்கு வந்துவிட்டது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.

அதேசமயம் மாணவிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் பயங்கரவாதிகள் என்னென்ன கோரிக்கைகள் வைத்தனர். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதா என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை. அதேபோல் மாணவிகள் கடத்தலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *