சுட்டெரிக்கும் வெயிலுக்கு கனடாவில் பலியானோர் எண்ணிக்கை 486 ஆக அதிகரிப்பு

உலகின் மிகவும் குளுமையான நாடுகளில் ஒன்று கனடா. பனி மழை மற்றும் பனிக்காற்று அந்த நாட்டு மக்களுக்கு பழகிப்போன ஒன்று. ஆனால் வழக்கத்துக்கு மாறாக, கனடாவில் தற்போது கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. அங்கு வரலாறு காணாத வகையில் வெப்பம் பதிவாகியுள்ளது.சுட்டெரிக்கும் வெயிலால் தார் சாலைகள் உருகும் நிலை ஏற்பட்டுள்ள நிகழ்வு அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதீத வெப்பத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் தலைநகர் விக்டோரியாவிலிருந்து 155 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லிட்டன் என்ற கிராமத்தில் சமீபத்தில் அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. வரலாறு காணாத இந்த வெப்பத்தால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று முன்தினம் வரை வெப்பம் காரணமாக 130 பேர் உயிரிழந்ததாக பிரிட்டிஷ் கொலம்பியா போலீசார் தெரிவித்தனர். கனடா மட்டுமின்றி, அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.இந்நிலையில், கனடா மற்றும் அமெரிக்காவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 486 ஆக அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *